Monday, 26 July 2021

காதம்பரி தேவி

            காதம்பரி தேவி வங்காள படைப்புகள் எப்போதும் ஓர் தரிசனத்தையும் அமைதியையும் தரவல்லவை. ஒரு வங்காள நாவலையோ ஒரு வங்காள கவிதையையோ ஒரு வங்காள கலைப்படைப்பையோ தீவிரமான மனநிலையில் நுகரும்போது அது எல்லையற்ற அமைதியையும் மென்னுணர்வையும் அளிக்கும். நேற்றிரவு வங்காள திரைப்படமான காதம்பரி பார்த்தேன். 

         தாகூர் குடும்பத்தின் படைப்புகள் மீது எந்த அளவிற்கு விவாதங்களும் உரையாடல்களும் எழுந்தனவோ அதே அளவிற்கு அவர்களது குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களும் பெங்காலிகளிடையே முணுமுணுப்புகளாக உண்டு. தாகூர் குடும்பத்தின் மருமகளும் ரவீந்திரநாத் தாகூரின் அண்ணியுமான காதம்பரி தேவியின் தற்கொலை குறித்து தாகூரின் எழுத்துகள் வழியே எழுந்த உரையாடல்கள் மூலம் நூல்கள் வந்துள்ளன. அத்துடன் அவரது தற்கொலையை மையப்படுத்தி வெளியான திரைப்படம் காதம்பரி. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவில் வைக்கப்படுவதில் எனக்கு எப்போதும் உவப்பில்லை. இருப்பினும் ஓர் உறவு கலைக்கு அடிப்படையாக எழும்போது அதுகுறித்த எழுத்துக்குத் தேவை இருக்கிறது. 
      
             தன் தந்தை பணியாற்றும் தாகூர் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் வாய்ப்பு சிறுமி காதம்பரிக்கு அமைகிறது. கணவனோ தன்னைவிட பதினைந்து வயது மூத்தவர். விளையாட்டையும் பொழுதுபோக்கையும் விரும்பும் சிறுமிக்குக் குடும்பப் பொறுப்புகள் அமைகின்றன. குடும்ப பொறுப்புகளை முடித்து எஞ்சிய நேரத்தில் சிறுமியாக அவ்வீட்டில் உலாவரும்போது அதே வயதையொத்த சிறுவன் ரவீந்திரநாத் தாகூர் தன் அண்ணிக்கு நல்ல களித்தோழனாக அமைகிறார். மேலும் தன் கணவனுக்கு வேறு பெண் மீது விருப்பம் இருப்பதை அறிந்து காதம்பரி தாகூர் குடும்ப கௌரவத்திற்கான மருமகளென மட்டுமே அமைகிறாள். களித்தோழன் என்கிற உறவை பெண் எந்த வரையறைக்குள்ளும் வைக்கமுடியாது. காதலனை விட உயர்ந்தவனா எனில் ஆம், காதலனிடம் சொல்லப்படாத ரகசியங்கள் கூட களித்தோழனிடம் சொல்லப்பட்டிருக்கும். களித்தோழனிடத்தில் காதல் இருக்கும்; ஆனால் அது உடல் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. இறுக்கி அணைத்துக் கொள்ள, தோளில் சாய்ந்து கொள்ள, ரகசியங்களை கிசுகிசுக்க, ஓடிப்பிடித்து விளையாட, அரங்கில் உடன் ஆட, எல்லாவற்றையும் பேசிச் சிரிக்க, உரிமையாகக் கோபம் கொள்ள எல்லா பெண்ணிற்கும் ஒரு களித்தோழன் தேவைப்படுகிறான்.

              களித்தோழனிடத்தில் விவாகரத்து குறித்தோ, காதல்முறிவு குறித்தோ அஞ்ச வேண்டியதில்லை. காதம்பரிக்கும் ரவிக்குமான உறவு அத்தகையது. ரவிக்கும் தன் படைப்புகளுக்கான ஊற்றுமுகமாகவும் முதல்ரசிகையாகவும் அமைந்திட காதம்பரி தேவைப்படுகிறாள். காதம்பரியை தேவியாக உருவகித்து உபாசகனென வழிபடுமளவிற்கு காதம்பரியின்பால் ரவி காதல் கொள்கிறார். லண்டன் பயணத்தின் போது காதம்பரியின் பிரிவால் எழுதிய பக்னா ஹிரிதய் கவிதை நூலை காதம்பரிக்கே சமர்ப்பிக்கின்றார்.

            மறுபுறம் காதம்பரி தன் கணவரின் சகோதரி ஸ்வர்ணகுமாரியின் குழந்தை ஊர்மிளாவுடன் நேரம் செலவளிக்கிறார். கவிதையில் ஆழ்வது, இசையில் செலவிடுவது, ஊர்மிளாவுடன் விளையாடுவது போன்ற செயல்கள் மற்ற சக மேட்டிமை மருமகள்களுக்கு எரிச்சலை வரவழைக்கின்றன. ரவியுடனான உறவை சக மருமகள்கள் இழிவாகப் பேசத் துவங்குகின்றனர்; காதம்பரி கணவரை சரியாக கவனிப்பதில்லை என்கிற அலரோடு கவனமின்மையால் நிகழும் ஊர்மிளாவின் இறப்பும் காதம்பரியை மிகப்பெரிய உளச்சோர்வினுள் தள்ளுகிறது. இதற்கிடையில் ரவியும் மிருணாளிணியை மணந்து கொள்கிறார். 

         இத்தனை நாள் களித்தோழனாக இருந்த ரவி திருமணத்திற்குப் பின் அந்நியமாகிறார். இவ்வளவு காலமும் தன் உணர்வுகளையும் ரசனைகளையும் ரகசியங்களையும் அருவியாய் பொலிந்த பெண்ணால் இப்போது எதையும் அடக்கி வைக்க இயலாமல் விடுதலை கொள்ள எண்ணுகிறாள். அளவுக்கதிகமாக அபின் உட்கொண்டு தாகூர் வீட்டிலிருந்து நிரந்தரமாக விடுதலை கொள்கிறாள் காதம்பரி. தாகூர் குடும்பத்தினர் அதை ஓர் இயற்கையான மரணமென அறிவித்து அதைக் கடக்கவும் முயன்றனர். 

           ரவீந்திரநாத் தாகூரின் "Broken heart" வாசிக்கப்படும்போதெல்லாம் விடுதலையடைந்த காதம்பரி மீண்டும் அக்காதலில் வீழ விழைவாள்.

Monday, 28 June 2021

ஓர் உலவு- சிறுகதை

 

                                   ஓர் உலவு


            இன்று முழுநிலவு நாள்; எனக்கு வானெங்கும் முழுநிலவுகள் தெரிகின்றன. இவ்வளவு ஒளிமிகுந்த இரவுகளை உன்னுடனான நாட்களில் கண்டுள்ளேன். எதிரில் வண்ணவிளக்குகள் நிலவின் ஒளிக்கு போட்டி போட்டுக்கொண்டு கடல்உலவுக்கலங்களின் கேளிக்கைகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. ஐந்து வருடங்களுக்குப் பின் இந்த அஜாக்ஸியோ நகரத்திற்கு வந்திருக்கின்றேன். இரண்டு வருடகால கோர்ஸிகா வாழ்க்கை இன்றைய இரவைப்போல இறந்தகாலத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கிறது. அப்பாவின் பணியின் பொருட்டு குழந்தைப்பருவத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நிலங்களில் காலத்தினை ஓட்டினேன். இருபதுகளின் தொடக்கத்தின் இனிமையை அறியச் செய்தது கோர்ஸிகா. கோர்ஸிகா மட்டுமன்று; நீயும்தான்; நீயும் நானும் இங்கு இருக்கமாட்டோமென்று நம்பிதான் விமான நிலையம் வரை நுழைந்தேன். இந்த விடுதியின் கார் ஓட்டுனர் பைகளை வாங்கிக் கொண்டு மார்த்தின் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது நீ நினைவுகளில் வரத்துவங்கினாய். பல்கலைக்கழக விடுமுறைகளில் நீயும் நானும் சேர்ந்து இந்த டி61 சாலையில் பலமுறை பயணித்திருக்கின்றோம். நம் கொண்டாட்டங்களையும் கூடல்களையும் ஊடல்களையும் இறுதியில் நம் பிரிவையும் கூட இந்த சாலை அறிந்துள்ளது.

             பச்சைவிழிகளுடன் குட்டையான மெல்லிய கேசமும் கன்னக்குழி சிரிப்பும் உயரமான உடலமைப்பும் வெளிறிய நிறமும் கொண்ட உன் காதலி வெரோனிக்கா என்னை அறைந்தது கூட இங்கேதான். அவளுக்குத் தெரியாது, நீ என் காதலன் என்று. நீயும் அதை தேவரகசியமாக வைத்துக்கொண்டாய். நாம் காதலித்த நாட்கள் அழிந்த கிரேக்க இதிகாசங்களில் ஏதேனும் ஒன்றாய் இருக்கக் கூடும். செர்ரிக்களை நறுக்கி விஸ்கியில் போட்டு பனித்துறுவல்களைச் சேர்த்து அருந்தும் பழக்கத்தினை நீயே கற்றுக்கொடுத்தாய். அன்றெல்லாம் மூன்று பெக்குகளில் உன்மீது சரிவேன். இன்று இது ஏழாவது பெக். ஒன்றுமே ஆகவில்லை.

             முதல்நாள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது பலரும் கோர்ஸ் மொழியில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டபோது நான் மட்டும் பிரெஞ்சில் அறிமுகம் செய்துகொண்டேன். இத்தாலியர்கள் கூட அதிகமாகவே இருந்தனர். ஆனால் பிரெஞ்சு பேச அப்போது ஆளில்லை. கோர்சிகாவின் கலாச்சார ஆராய்ச்சிகள், கிரேக்க புராணங்கள், லித்தியகாலங்கள், ரோமர்கள் என்று பாடங்களுக்குள் முடங்கிக்கிடந்தேன். கோர்சு புரிந்தாலும் பிரெஞ்சிலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். சிறிது நாட்களில் நீ எனக்கு பகுதிநேர விரிவுரையாளராக அறிமுகமானாய். அப்போது உனக்கு நான் எழுதிய காதல்கடிதங்கள் மிகுந்த மரியாதையுடன் எழுதப்பட்டிருக்கும். மார்த்தினியோ ரூஸோ என்று அறிமுகம் செய்து கொண்டு பாடங்கள் நடத்திக்கொண்டிருப்பாய். உண்மையில் நீ பாடம் நடத்தும்விதம் அசுவாரசியமானவை. அரைத்தூக்கத்திற்கு அழைத்துச் செல்வாய். ஒருநாள் உன்கேள்விக்கு ஏதோ பதில் சொன்னேன். உடனே பாராட்டி பெயர் கேட்டபோது இனானா மிலானி என்றேன். இனானா சுமேரிய தொல் இறைவி என்று அவள்குறித்து சிறிது நேரம் நீ  வகுப்பெடுக்க ஏன் பெயர் சொன்னோமென எண்ணுமளவிற்கு நித்திரை வந்தது.

             முதல்பருவத் தேர்வுகளில் என்னால் முடிந்தஅளவிற்கு நன்றாக எழுதி வகுப்பில் இரண்டாவதாக வந்தேன். அப்போதும் தனியாக அழைத்துப் பாராட்டினாய். அந்த தருணத்தில்தான் உன்மீது ஈர்ப்பு வரத்துவங்கியது. ஏனெனில் நீ அப்போது கோர்சுவிலோ இத்தாலியத்திலோ பேசாமல் பிரெஞ்சில் பாராட்டினாய். பிறகு ஒருநாள் தேநீர்விடுதியில் தனியாக உன்னைக் கண்டேன். ஓடிவந்து உரையாடத்துவங்கினேன். நன்றாக நினைவுள்ளது மார்த்தி, "எனக்கு கோர்சு மொழி கற்றுத்தருகின்றீர்களா மதிப்பிற்குரிய மார்த்தினியோ" என்று சம்பாஷனையைத் துவங்கினேன்.நீ உறக்கம் வரவைப்பாய் என்று தெரிந்தும் உன்மீது இருக்கும் குருட்டுத்தனமான ஆர்வத்தில் கேட்டேன்.

               ஓய்வுநாட்களில் நம் சந்திப்புகள் கற்றல்தொடர்பாக ஆரம்பித்தன. உன் அம்மாவின் பெர்சிய சாயல்தான் உன்னிடம் பெரிதாக நிறைந்திருக்கும். உன் அப்பா துணைப்பெயருக்காகவே இருக்கிறார் என்று நான் சுட்டியபோது "என் அம்மா நான் அப்பா போல நடந்துகொள்வதாகச் சொல்வாள்; என்றாய். உடனே நான் "உங்கள் அப்பாவும் பாடம் நடத்துகையில் உறக்கம் வரவைப்பாரா" என்று சற்று அத்துமீறிவிட்டேன். நீ விளையாட்டாய் பதிலுக்குத் தலையில் தட்டினாய். உன் ஆண்மை உனது பாவனைகளுக்கு என்னை ரகசிய ரசிகையாக மாற்றியது. ஆறரை அடி உயரத்தில் முகத்தில் நரம்புகள் தெரியுமளவிற்கு வெளுப்பாக இருப்பாய். அடர் மீசை யும் தேகத்தில் ரோமங்களும் கொண்டு முழுக்க பெர்சியனாகவே தெரிவாய். நீ சிரிக்கும்போது, பாவனைகளை மாற்றும்போதெல்லாம் கன்னங்கள் சிவக்கும். நீ விரிவுரையாளனாக இருப்பதற்கு பதிலாக குதிரையில் அமர்ந்து நகர்வலம் வருகின்ற படைவீரனாகியிருக்கலாம். ஆனால் உன் குரல் கொஞ்சம் பெண்மை மிக்கது. அதுதான் என் உறக்கத்திற்குக் காரணம். எனக்குப் பிடிக்காததும் உன் குரல்தான். ஆனால் பழகிவிட்டது.

            பல்வேறு விவாதங்கள் நடத்தியுள்ளேன். உன்னால் நான் கோர்சுவில் விவாதம் நடத்துமளவிற்கு வளர்ந்தேன். என் கழுத்தெலும்புப் புடைப்புகள் விரிய உன்னிடம் ஒருநாள் காரணமின்றி வம்பிழுத்துக் கத்தினேன். ஏனெனில் லூசியாவை அழுத்தமாகக் கட்டிப்பிடித்துப் பாராட்டினாய். நீ சாதாரணமாகவே செய்தாய். அவள் கண்களில் காதலைக்கண்டதும் மிகுந்த எரிச்சலுக்குள்ளானேன்.

மொபைல் அழைப்பு வருகிறது,

"ஹலோ... சொல்லுங்கள் வாஹித்"

"ஏய் இனா, சென்று சேர்ந்தால் அழைக்கமாட்டாயா?!... நீ நினைவுகளுக்குள் மூழ்கலாம்... உன் நினைவுகளுக்காகவே பிரத்தியேகமாக பத்து நாட்கள் தந்துள்ளேன்...ஆனால் என்னைப் பிரிவுற்றவனைப் போல உணர வைக்காதே"

"மன்னியுங்கள் வாஹித்...லவ் யூ"

"அவ்வவ்வபோது அழை, இனானா...இது உனக்கான காலம்... எனக்கு கடந்தகாலமென பெரிதாக இல்லை....உழைப்பிலேயே வீணாக்கியவன்...அதில் மனைவியைக்கூட தொலைத்தவன்... நீ அவ்வாறானவள் கிடையாது"

"அன்பே...இப்படிப்பேசாதே... உன் உழைப்பின் டாலர்கள்தான் எனக்கு இந்த விடுமுறையைப் பரிசளித்திருக்கின்றன...நீயும் உடன்வந்திருக்கலாம்...வாஹித்"

"இல்லை... இனானா...நான் வந்தால் நீ பாதி நிஜத்திலும் பாதி நினைவுகளிலும் தத்தளித்துக் கொண்டிருப்பாய்...வரும்போது நிறைவுற்றவளாக வா... அதுபோதும்...அடுத்த விடுமுறைக்கு இருவரும் சேர்ந்தே அலய்னாவுடன் ஆசியா பயணம் மேற்கொள்வோம்"

"நீ என் கடவுள் வாஹித்...நான் உன்னுடையவள் என்பதை மறக்காதே..."

"முத்தங்கள்...இனா...நீ என்னுடையவள் என்பதால் மட்டுமே உனக்கிந்த பயணம்...இப்போதே நள்ளிரவு ஆகின்றது...உறங்க முயற்சி செய்...கண்ணே"

"லவ் யூ வாஹித்"

                வாஹித் எத்தனை நல்லவன் மார்த்தி! நமக்கான நேரத்தினை அளித்திருக்கின்றான். உன் வெரோனிக்கா என் வாஹித்தின் நிழல்பக்கம் கூட நிற்க இயலாது. வாஹித் கிலானியை நான் துபாய் பயணத்தில் ஒரு தொழில்முனைவோர் விருந்தில் சந்தித்தேன். அவனது மனைவி சாரா ஒரு அமெரிக்கனுடன் காதல் வயப்பட்டு பிரிந்திருந்த காலமது. நானும் உன்னைவிட்டு வெகுதூரம் வந்திருந்தேன். எனக்கு நீ துரோகம் இழைத்ததாகவே அப்போது கருதினேன். வெரோனிக்கா மேத்யூ உன் முன்னாள் காதலி என்பதையும் அவள் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றதையும் நீ மறைத்திருக்கக் கூடாது மார்த்தினியோ. அவள் என்னை விலைமாது போல நடத்தினாள். அவளுக்கு நீ எழுதிய காதல் கடிதங்களை என் முன்னால் வீசி "பார், விலைமகளே...தற்காலிகப் பிரிவில் புகுந்து குளிர்காயப் பார்க்கிறாயா" என்று பல்கலைக்கழக வளாகத்தில் நின்று கூச்சலிட்டாள். அன்று பித்துப்பிடித்தவள் போல அவற்றையெல்லாம் பொறுக்கியெடுத்து கண்ணீருடன் வாசித்தேன். ஆம், இன்று என்னை அழைக்கின்ற அத்தனை வார்த்தைகளையும் வர்ணனைகளையும் அவளுக்கு எழுதியிருந்தாய். கண்ணாடித் துகள்களாகச் சிதறினேன். என் நீண்ட கூந்தலுக்குள் முகம் புதைத்துக்கொண்டு ஓரிரவில் "வானில் ஒரு நட்சத்திரத்தைக் காணவில்லை; அது இப்போது என்னுடன் இருக்கிறது; அதன் இருள்கூந்தலுக்குள் நான் முகம் புதைத்துக் கிடக்கின்றேன்" என்றாய். உன் நட்சத்திரம் இன்று இந்த வளாகத்தில் சிதறிக்கிடக்கிறது. நீ சார்தினியாவில் இருந்து நாளைமறுநாள் வருவாய். உன் வெரோனிக்கா என்னை நம்வீட்டில் இருக்கவிடமாட்டாள் என்றே கருதுகிறேன். ஒருவேளை துரத்தப்பட்டால் அஜாக்ஸியோ விமான நிலையத்தில் அருங்காட்சியக சிலைபோல காத்திருக்கின்றேன். இல்லையெனில் நூற்றிப்பத்து யூரோக்களில் கடல்உலவில் சென்று மூன்று பெக் வைன் அருந்தி இந்த அமைதியான கடலுடன் கலந்துவிட ஆசைப்படுகிறேன். இப்படியான மனநிலையில்தான் அன்றிரவு வீட்டிற்குச் சென்றேன்.

            ஆனால் வியப்பு! வீட்டில் நுழைந்ததும் வெரோனிக்கா ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக ரொட்டித்துண்டுகளைத் தின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து மன்னிப்பு கேட்டாள். என்னால் நம்பவே முடியவில்லை. "மிஸ். மிலானி, நீ ஒரு சிறுபெண், நான் அறியாமல் அவ்வாறு கோபித்துவிட்டேன், இன்றும் மார்த்தினியோ என்னைக் காதலிக்கின்றான். உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் என்னைக் கடந்தகாலமாக மட்டும் கருதியிருந்தால் உன்னிடம் நிச்சயம் தெரிவித்திருப்பான். நான்தான் பிரிந்தேன். அவன்மீது சந்தேகம் கொண்டேன். பிரிந்தேன்; அவனே என்னிடம் என்றேனும் என்மேல் துளிக்காதல் தென்பட்டால் வா வெரோனிக்கா என்றான். அவன் முகத்தில் காபியை ஊற்றிவிட்டு கிளம்பினேன். இன்று மன்னிப்பு கேட்டு இணையவந்துள்ளேன். இந்த ஒன்றரை வருடமும் வறட்டுப்பிடிவாதத்தால் தனித்திருந்தேன். ஓரளவிற்கு மேல் அவன் காதல்முன் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இப்போதும் நீ அவனைக் காதலித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனது காதல்தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. புரிந்துகொள்.நீ இந்த வீட்டிலேயே உனது ஆராய்ச்சிப்படிப்பு முடியும் வரை இருக்கலாம். மேற்கொண்டு படிக்கவோ பணிகளுக்கோ நான் உதவுகின்றேன். ஆனால் நீ அவன் காதலி இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள். இல்லையென்றால் என்றேனும் உனக்கிது பெரும்வலியை ஏற்படுத்தக்கூடும். மீண்டும் என்னை மன்னித்துவிடு இனானா" என்று சொற்களை மிக நேர்த்தியாகக் கோர்த்தாள். அவளது பச்சை விழிப்பார்வை என்மீது நஞ்சைப் பரவவிட்டதை உணர்ந்தேன்.

              பதில் கூறயியலாமல் "நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும் வெரோனிக்கா" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்தேன். மெத்தையில்  வீழ்ந்து கம்பளியைப் போர்த்திக்கொண்டு கதறியழுதேன். அந்த இரவு கடந்திட இறைவனை மன்றாடினேன். பல கூடல்களின் முடிவில் நாம் ஒன்றாக சுற்றிக்கொண்ட கம்பளி இன்று இன்னுமொரு உறைவாதையினை அளித்தது.

            உன்வீட்டில் தங்க ஆரம்பித்த நாட்களில் பனைமரங்கள் சூழ வீசும் குளிர்காற்றை மிகவும் விரும்பினேன். பனைமரங்களுக்கு நடுவிலிருந்து வரும் சூரியஒளி என்னை அழகாக்குவது போல உணர்ந்தேன். ஒருநாள் இருவரும் காலையில் பல்கலைக்கழகத்திற்குக் கிளம்பும்போது நீ காரை எடுத்துக்கொண்டு வெளியே நின்றாய். நான் சூரிய ஒளியில் நடந்துவருவதைக் கண்டு "தங்கத்தில் குளித்தவள் போல இருக்கிறாய்" என்று நெற்றியில் முத்தமிட்டாய். அந்த இளஞ்சூட்டுச் சூரியனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

         இதே டி61 சாலையில் உள்ள உணவு விடுதியில் நீயும் நானும் பன்றி இறைச்சித்துண்டுகள் பரப்பப்பட்ட ப்ரூஸ்கெட்டாவும், ஸ்பினாச் கிராஸ்தினியும் தெரிவு செய்து மதிய உணவை இந்தக் கடலை வேடிக்கை பார்க்கச் செய்து மென்றுகொண்டிருந்தோம். நான் மேலிருக்கும் வெண்ணெயில் வார்த்த இறைச்சித் துண்டுகளை மட்டும் தின்றுவிட்டு அடியிலிருக்கும் ரொட்டியை உன்னிடம் தந்தேன். என் கன்னத்தைக் கிள்ளி விளையாடியபடி நீ சுவைத்துக்கொண்டிருந்தாய். ஒருநாள் உன்வீட்டில் நீயே எனக்குப் பன்றி இறைச்சியினை லாவகமாக ஒரேவடிவங்களில் வெட்டி ஏதோ மாயங்கள் செய்து வறுவலாக்கித் தந்தாய். இரத்த ரோஜா நிறத்தில் அத்துண்டுகள் பளபளப்பாக பொறிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு துண்டாக மெல்லும்போது இறைச்சியின் கொழுப்பு நாக்கில் படிய ஒரு மென்மையான கதகதப்பினைத் தந்தது. கண்ணை மூடிக்கொண்டு நான் ரசித்து ருசித்தபோது "உனக்கு இது இவ்வளவு பிடிக்குமா?" என்றாய். "பல நகரங்களில் இதேபோன்ற இறைச்சிகளைச் சுவைத்துள்ளேன், மார்த்தினியோ...ஆனால் இந்த இறைச்சித் துண்டுகளின் சுவையாக உன் காதல் நிறைந்துள்ளது" என்றேன்.

         நம் பிரிவிற்குப் பின் நான் பன்றி இறைச்சியினை சுவைக்கவேயில்லை. வாஹித் பன்றியிறைச்சி உண்ணமாட்டான். நானும் அவனுடன் இணைந்துகொண்டேன். இன்று இந்நகரத்திற்கு வந்துகூட காய்கறி சாலட்களையும், மாட்டிறைச்சி பீஸாக்களையும் தின்றேன். கண்கள் முழுவதும் பயண அசதியும் நித்திரையும் தேங்கிநிற்கின்றன. இந்த விடியல் மீண்டும் உன்னை நினைவுபடுத்துவதாகட்டும்.

மறுநாள் காலை 11 மணி

                  ரொம்ப நாட்களுக்குப் பிறகு அசதியில் நிறைவாக தூக்கம் கிட்டியுள்ளது. நல்ல உறக்கம் என்பது மார்த்தினியோவின் கைகளுக்குள்ளும் பின்னர் வாஹித்தின் கைகளுக்குள்ளும் இருக்கின்றது. வாஹித் தனது தோல் தொழிற்சாலை வணிகம் தொடர்பாக வெளியே தங்க நேர்ந்திடும் சமயங்களில் எல்லாம் தலையணையில் தனிமையின் கனத்தினை உணர்வேன். கிரீன் டீ அருந்திக்கொண்டே காதல் கதையினைக் குறிப்புகளாக எழுதுவதும் அழகிய உணர்வாக இருக்கின்றது. வாஹித்திடம் பேசவேண்டும்போல உள்ளது. ஆனால் சான் ஃபிரான்ஸிஸ்கோ நேரப்படி அதிகாலை மூன்று மணி இருக்கும்.

             வாஹித்தை எழுப்பினால் கூட உடன் உறங்கும் அலய்னாவும் எழக்கூடும். அவள் தன் தந்தையுடன் உறங்குவதில் அத்தனை விழைவு கொள்கிறாள். நான்கு வயதில் அம்மாவை விமான நிலையம் வந்து அழாமல் முத்தமிட்டு விடைகொடுக்கும் அளவிற்கு வாஹித் அவளைப் பழக்கியிருக்கிறான். என் வயிற்றில் இருந்தபோதே அவள் வாஹித்தின் குரலுக்கு அசைவு கொடுப்பாள். வாஹித் முத்தமிட்டால் துள்ளுவாள்; வயிற்றிலேயே தந்தையுடன் காதல் உடன்படிக்கை செய்துகொண்டவள். பிறந்ததும் வெள்ளைடவலில் பூங்கொத்து போல கொண்டு வந்து தந்தார்கள். என்னைப்போலவே அடர்பழுப்பு நிறக் கண்கள்; கொஞ்சமாகப் பட்டுநூல் போல நெற்றி படர்ந்த பழுப்பு முடிகள். வாஹித்தின் அதே வெள்ளை நிறமும் அவனது மூக்கும். டவலை அழுத்தினாலே சிவந்தாள். வெள்ளை ரோஜாவிற்குக் கைகால்கள் முளைத்தது போல துள்ளிக்கொண்டிருந்தாள். புருவத்தை உயர்த்தி அவள் மொழியில் தந்தையைக் கேட்டாள். வாஹித்திடம் "இவள் நான் உனக்கு அளிக்கும் பரிசு" என்று கண்ணீர் வர பூரிப்புடன் தந்தேன். கைகளில் வாங்கியதும் வாஹித்தைப் பார்த்து குமிழ்வாயால் சிரித்தாள்; தன் பிஞ்சு விரல்களால் அவன் மூக்கைப் பிடித்தாள். மீசையைப் பாதத்தால் தொட்டு கூச்சமாகி அழத்துவங்கினாள். என் முலைகள் இரண்டையும் கனமாக உணர்ந்தேன். ஆம், அவளுக்காக பால் சுரக்கத் துவங்கியது. அந்த சிறிய வாயினால் முலைக்கண்ணைக் கவ்வி தேங்கிய கண்ணீருடன் பாலை உறிஞ்சத் துவங்கினாள். வாஹித் என் தலையை வருடிக்கொடுத்து "அவள் உறிஞ்சுவதை என்னால் உணர முடிகிறது" என்று என்னை அணைத்துக் கண்ணீர் சிந்தினான். இரானிய மொழியில் அலய்னா என்றால் இளவரசியாம். ஆம், வாஹித்தின் இளவரசி, என் காதல் சாம்ராஜியத்திற்குக் கிடைத்த இளவரசி. இப்போது யார் பெயர் கேட்டாலும் இளவரசி "அலய்னா கிலானி" என்று பெருமையாக முகத்தை  வைத்துக்கொண்டு கிலானியுடன் சேர்த்துச் சொல்கின்றார்கள். கொஞ்சநேரம் வீதிகளிலும் கடற்கரையிலும் செலவளிக்க விழைகிறேன்.

                  சிட்டாடல் கடற்காற்றினை சுவாசித்துக்கொண்டு ஒருவித மர்மத்தினைத் தன்னுள் தேக்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் கடல்உலவுகளில் விருப்பம் கொள்கின்றனர். சுற்றுலாவில் கூட தங்களது அந்தஸ்த்தை ஏற்றிக்காட்ட முயல்கின்றனர். சொகுசுக்கப்பல்கள் வராத காலத்தில் சிட்டாடல் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இருந்தது. மார்த்தினியோ, நீயும் நானும் அந்த நீலப்படிகக் கடலில் நின்று இதழோடு இதழ் கோர்த்து முத்தமிட்டதை ஒரு ஐம்பது பேரேனும் பார்த்திருப்பார்கள். இன்று அதிகபட்சம் ஒரு பதினைந்து பேர் இருக்கின்றனர். அவர்களும் புகைப்படம் எடுப்பதில் முனைப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நீலத்தின் தூய்மைக்குள் கலந்திட ஒருவருக்கும் விருப்பமில்லை.  இங்குள்ள கூழாங்கற்கள் என் பாதங்களை நலம்விசாரித்துக் கொண்டன. கடலில் தனியாக இறங்கி நின்றேன். இடையளவு நீர் என்னை ஏந்திக்கொண்டது. கொஞ்சமாக உள்ளிழுத்தது; நீலத்துடன் முழுதாகக் கலந்து ஆழ்ந்திடும் அளவிற்கு ஆர்வம் ஏற்பட்டது. உடலில் சிலிர்ப்பு தோன்றியது. ஒருவித பித்துநிலைக்குச் செல்வதாக உணர்ந்து மெதுவாக வெளியே வந்தேன். உடைமாற்றிக்கொண்டு டி111ஏ சாலையில் நடக்கத் துவங்கினேன். சன்கிளாஸினால் கண்கள் சோர்வடையவில்லை. கடல்சார் உணவகத்தில் ரொட்டித்துண்டுகளும் இறால்களையும் உண்டேன். மணி மாலை 4 ஆகிறது. வாஹித் எப்படியும் தொழிற்சாலைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பார்.

"வாஹித்"

"சொல்... இனானா....இப்போதுதான் உன்னைப் பற்றி நானும் அலய்னாவும் பேசிக்கொண்டிருந்தோம். நீ முத்தமிடும்போது உனது பிங்க் லிப்ஸ்டிக்கினால் மட்டுமே அலய்னா கன்னம் சிவக்கிறதாம். என்னிடம் முத்தம் வாங்கிவிட்டு கண்ணாடிக்கு இழுத்துச்சென்று பாருங்கள் அப்பா சிவக்கவில்லை என்கிறாள்"

"உங்கள் அழுத்தமெல்லாம் என்னிடம் மட்டும்தான்...அம்மாவின் கன்னம் சிவக்குமே என்று பதில் சொல்லி இருக்கலாமே"

"கள்ளி, அலய்னாவுக்கு நான் மென்மையானவன்"

"ஆனாலும் உங்கள் குணம் அவளிடம் இருக்கின்றது...நீங்கள் கழுத்தில் கடித்தால் அவள் வந்து அம்மா முத்தம் தருகிறேன் என்று சொல்லி கன்னத்தில் கடித்து வைக்கின்றாள்...முரட்டுபெண்"

"உன்னுடைய கடிகளும் கீறல்களும் எதில் சேர்த்தி? கிளம்பும் அன்று என் முதுகில் ஏற்படுத்திய கீறல் இரண்டு நாட்களாகியும் எரிகிறது...அரக்கியே"

"நல்லது...இன்று தொழிற்சாலை செல்லவில்லையா...இல்லை...இளவரசியுடன்தான் என் பொழுதுகள் கழியவேண்டுமென்பது இளவரசியின் ஆணை"

"ஆம், என்னைத் தொழிற்சாலைக்கு அனுப்பி அலுவல்களை முடிக்கச் செய்து அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற கணவன் தானே நீ...அவள் உன்னைக் கெடுக்கிறாள்"

"ஆம், அம்மாவை போலவே"

"அவளின் குறும்புகளுக்கு நீயும் பொறுப்பு"

"அது இருக்கட்டும், இன்று என்ன செய்தாய் என் கண்மணியே"

"இன்று உன் தீயமனைவி கடற்கரைக் கூழாங்கற்களிடம் வாஹித்தை மறந்தும் காதலித்து விடாதீர்கள் என்று வகுப்பெடுத்து வந்தாள்"

"ஏன் அவ்வாறு?"

"என்னைவிட உன்னை அதிகமாக யாரும் காதலித்துவிடக் கூடாதென்று"

"அலய்னாவிடமுமா போட்டிக்கு நிற்பாய்?"

"ஆம், சொல்லி வை...அந்த கொடுங்கோல் ஆட்சி செய்யும் இளவரசியிடம்"

"இதோ, மாட்சிமை பொருந்திய இளவரசி அவர்களே ஓடி வருகிறார்கள்...உன்னை ஆணையிட"

"ஏய் மில்லானி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்"

"இன்னும் உனக்கு இனானா வரமாட்டேங்கிறதே  இளவரசி... எங்கே...சொல்...இனானா"

"ஈஆன்னா..."

"இ..."

"ஈ..."

"னா"

"ஹா"

"னா"

"ஈஹாஆன்னா"

"போதும்... அலய்னா...நான்கு வருடங்களாக என் கையில் இருக்கிறாய்...என் பெயர் சொல்ல முடியவில்லை...மற்றதெல்லாம் தெளிவாகப் பேசு"

"போதும் மில்லானி... நீ பெயர் கற்றுக்கொடுப்பதாக இருந்தால் நீ அங்கேயே இருந்துகொள்...அப்பாவிடம் நான் வேறு மில்லானியை வாங்கச் சொல்கின்றேன்"

"இறைவா...பொறுத்தருள்க குட்டி இளவரசியே...அலய்னாவிற்கு என்ன வேண்டும்?"

"நிறைய முத்தங்கள் வாங்கி வா...மில்லானி...அப்புறம் அப்பா ஒரு கதை சொன்னார்...அதில் வரும் தேவதையை வாங்கி வா..."

"உனக்கெதற்கு தேவதை"

"அதாவது வேலை செய்ய"

"இன்னும் நூறு தேவதைகள் வந்தாலும் உனக்கு போதாதே"

"சரி, அப்பாவிடம் பேசு... நான் பூக்களிடம் பேசப் போகிறேன்"

"நல்லது,"

"வாஹித், அதென்ன தேவதைக்கதை?"

"சான்பிரான்ஸிஸ்கோ வா...இரவில் சொல்கின்றேன்...அலய்னாவிற்குத் துணையாக குட்டி தேவதை வேண்டுமாம்"

"அடுத்த விமானத்தில் வரவா? உன் காதலை மிகவும் தேடுகின்றேன்...அல்லது அலய்னாவுடன் கிளம்பி நீயாவது வா"

"அட, உன் பயணம் முழுதாக முடிய வேண்டாமா? இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன... குறிப்புகள் என்னாவது?"

"இந்த நொடியில் அது தேவையற்றதெனக் கருதுகிறேன் வாஹித்"

"அடுத்தநொடியில் தேவையானதாக இருக்கலாம்...மொபைலை வைத்துவிட்டு குறிப்பெழுதச் செல் சிறுக்கியே"

"என்னை வதைக்கிறாய் வாஹித்"

"லவ் யூ இனானா...நான் அழைப்பைத் துண்டித்துவிட்டேன்"

"லவ் யூ வாஹித்"

         துபாயில் மன்ஸில் டவுன் டவுணில் ஐந்தாவது தளத்தில் அறைக்குள் வெறுமை சூழ்ந்ததால் வெளியில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். அவன் தனது தொழில்முனைவோர் சந்திப்பு முடிந்து சகாக்களுடன் பேசிக்கொண்டு வரும்போது என்னை உற்று நோக்கினான். நான் வெளியே ஒளிர்ந்துகொண்டிருந்த வண்ணமின்விளக்குகளை நோக்கியபடி நடந்தேன். அவன் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றதை உள்ளம் உணர்த்தியது. இரவில் வியா வெனெட்டோவில் ஒரு மூலையில் அமர்ந்து நியோக்கி கர்கன்ஸோலா மற்றும் ஹவுஸ் வைன்னும் ஆர்டர் செய்தேன். கூரிய மூக்கும் பச்சை நரம்புகள் மிளிர அழகாகக் கலைத்துவிடப்பட்ட முடியுடன் ஆறரை அடி உயரத்தில் ஒருவன் என்முன் வந்து அமர்ந்தான். ஆம், அப்போது உற்று நோக்கியவன்தான். "நான் வாஹித் கிலானி" என்று கை கொடுத்தான்; நானும் மிலானி என்று அறிமுகம் செய்துகொண்டு கை குலுக்கினேன். "தனியாகவா வந்துள்ளீர்கள்? உங்களைப் பார்த்தால் அர்மேனியர் போல் தெரிகிறது " என்றான். மென்னகையுடன் சற்றே கூச்சத்தை வெளிப்படுத்தி பிரெஞ்ச் தேசத்தவள் என்றேன். "இல்லையில்லை, பெரிய நெற்றி, புருவமற்ற பெருவிழிகள், நீள்கூந்தல், இதெல்லாம் அர்மேனிய சாயல்" என்றான்.

            உண்மையில் எனக்கு அம்மாவைப் பற்றிய விவரம் தெரிந்ததில்லை; அப்பாவிடம் கேட்டதுமில்லை. அப்பாவின் காதலி அப்பாவிற்கு உதவியாளராக இருந்தாள்; அவள் இறுதிவரை அப்பாவைக்கூட திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த அம்மையார் என்னைச் சிறுவயதில் ஓய்வுநேரங்களில் கொஞ்சிக்கொண்டிருப்பார். எனது தனிமையை எடுத்துக் கொண்டவர்களுள் முக்கியமானவர். அப்பா எங்கிருந்தாலும் வங்கிக்கணக்கில் யூரோக்கள் விழுந்துகொண்டே இருக்கும். நானும் பகட்டாக செலவு செய்பவள் கிடையாது. இவ்வளவு சிந்தனையும் ஓடி திடீரென வியா வெனெட்டோ டேபிள் முன் அமர்ந்திருக்கும் நினைவு வந்தது. அவன் கன்னம் சிவந்த புன்னகையுடன் என்னவாயிற்று என்று கேட்டான். ஒன்றுமில்லை என தலையசைத்துவிட்டு வைன் அருந்தத் துவங்கினேன். அன்றைய இரவில் அவனது கதைகளைக் கேட்கத் துவங்கினேன். தலையசைப்புகளையும் "ஹ்ம்"களையும் கடந்து பெரிய மறுமொழிகள் நான் சொல்லவில்லை. அவனது தோல் பதனிடும் தொழிற்சாலை நஷ்டத்தை நோக்கி நகர்வது குறித்தும் இருந்தும் காதலியின் நினைவை மறக்க இங்கு வந்துள்ளதாகவும் சொல்லியபோதுதான் நிஜமாகவே மகிழ்ந்து நானும் அந்த துரோகியை மறக்கவே இங்கு வந்தேனென்று உன்னுடனான மோசமான அனுபவங்களைச் சொல்லினேன். மிகுந்த ஒலியுடன் சிரித்தான்; என்னைச் சிறுமியென்று சொல்லி கேலி செய்தான். இருவரும் பேசிக்கொண்டே அவரவர் அறைகளை நோக்கிக் கிளம்பினோம்.

              அறையில் பொன்னொளிர் விளக்குகளில் நிலைகண்ணாடியில் அழகாகத் தெரிந்தேன். ஆனாலும் விழிகள் சோகத்தை ஏந்திக்கொண்டிருந்தன. பின்னர் கேமிசோலும் பாக்ஸரும் மாற்றிக்கொண்டு பால்கனியில் அமர்ந்து இருளையும் அதைத் தோற்கடிக்க முயலும் நகரத்தின் ஒளிவீச்சினையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் நகரத்தின் ஒளி சலிப்பூட்டி இருளைத் தேடத் துவங்கினேன். தலை வலிக்கவும் தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நித்திரையைத் தேடினேன். அறையின் அழைப்புமணியை யாரோ அழுத்தினார்கள்; எழயியலாமல் புரண்டு படுத்தேன்.

              மாலை நான்கு மணிக்கு ஒருவழியாக எழுந்து குளித்துவிட்டு வாஹித் அறைக்குச் செல்ல கதவைத் திறந்தால் வாஹித் வாசலில் நின்றான்.

"குட் மார்னிங், உனக்கு இப்போதுதான் விடிந்ததென்று அறிந்தேன்"

"ஹாஹாஹா...குட்  ஈவினிங் வாஹித்...உங்களுக்கு இது மாலைநேரம்தானே"

"அப்படித்தான் நினைக்கிறேன் மிலானி"

"வெகுநேரம் தூங்கிவிட்டேன்...நடுவில் வந்து எனக்காய் காத்திருந்தீர்கள் என்றால் மன்னிக்க வேண்டும்."

"உள்ளை அழைக்காமல் வாசலில் மன்னிப்பு கேட்டு திருப்பி அனுப்புவதாய் உத்தேசமா?"

"மீண்டும் மன்னிக்க, வாருங்கள்"

       வேலைப்பாடு மிக்க நாற்காலியில் அவன் அமர்ந்திருந்த தோரணையில் ஓர் பேரரசனாகத் தெரிந்தான். பொன்னிற கோட் சூட் அவனுக்கு மிகப் பொருத்தமானதாய் இருந்தது. அறைக்கு தேநீர் கொண்டு வரச்செய்து சாதாரண உரையாடலாகப் போய்க்கொண்டிருந்தது.

"நாளை என்ன திட்டம் மிலானி"

"தெரியவில்லை"

"அப்படியானால் என்னுடைய மனைவியாக என்னுடன் சான் பிரான்சிஸ்கோ வரயியலுமா?"

"வாஹித், உங்களின் நகைச்சுவை உணர்வு என்னை வியப்பு கொள்ளச் செய்கிறது"

"நான் நிஜமாகவே கேட்கின்றேன்...குறைந்தபட்சம் என்னுடைய காதலியாக வா...பிடித்திருந்தால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்... இதோ விமானச்சீட்டுகள் கூட தயாராக இருக்கின்றன பார்"

"என்ன சொல்கின்றீர்கள் வாஹித்?! நான் யோசிக்க நேரம் வேண்டும்"

"நாளை காலை 9:10இற்கு எமிரேட்ஸ் விமானம் தயாராக நிற்கும்...நான் இங்கிருந்து காலை ஏழு மணிக்கு அறையை காலை செய்கிறேன்...அதுவரை தாராளமாக யோசிக்கலாம்... உன்னை ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டேன்...என்னை நம்பமுடியுமென்றால் மட்டும் என்னுடன் வரலாம்.... இரவு முழுவதும் உன் பற்றிய சிந்தனை... அவளை முழுதாக என்னுளிருந்து மழுங்கச் செய்துவிட்டாய்...நல்லதொரு துணையாக அமைவாய் என்ற நம்பிக்கையில்தான் இத்தகைய அசட்டுத்தனம் செய்தேன்...மன்னித்துவிடு... வரமுடியவில்லையென்றால் நல்லதொரு தோழியாக வழியனுப்ப வரவேண்டுமென்பது இந்த நண்பனின் கோரிக்கை"

         சலனமில்லாத தெளிவான பேச்சு என்னைப் பரபரப்பிற்குள்ளாக்கியது.

"ஓரிரவில் உங்கள் வாழ்க்கைத்துணையாக என்னை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?"

"இதோ பார் மிலானி... நேற்றிரவு நீ சொன்ன உன் அனுபவத்தில் உன் எதிர்பார்ப்பு காதலாக மட்டுமே இருந்தது; சாரா என் தொழிலை கவனித்து வந்தாள்; சற்று நான் நஷ்டமடைகின்றேன் என்று தெரிய வந்தபோது திறமையற்றவன் என்று ஒரே வார்த்தையில் என்னை தூக்கி விசிவிட்டு ராபர்ட்டுடன் கைகோர்த்தாள்.உண்மையில் அன்றிரவு நான் தற்கொலைக்கு முயன்றேன்.அல்லாஹ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு என்னைக் கைவிட்டதாகவே உணர்ந்தேன். அல்லாஹ்விடம் பிரிவை ஒப்புக்கொள்ள முடியாமல் கதறி மன்றாடினேன். மீட்பவனும் அவன்தானே, மிலானி... நேற்று அவன் என்னை மீட்டதாக உணர்ந்தேன்" என்றான்.

        மறுநாள் காலையில் வாஹித்துடன் விமானம் ஏறினேன். அன்றிரவு மார்த்தினியோ என்கிற கையாலாகா துரோகியிடமிருந்து என்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல வந்த கந்தர்வனாக நான் வாஹித்தை உணரவில்லை. கந்தர்வனில்லை; ஆனால் தற்கொலை மனநிலையில் இருந்த எனக்கான மீட்பனாக உணர்ந்தேன். அன்று உன்னை கையாலாகா துரோகி என்று உறுதிப்படுத்திக் கொண்டேன் மார்த்தினியோ. உன்மீதான நல்ல அபிப்பிராயங்களை வாஹித் எப்போதும் சுட்டிக்காட்டுவான். எனினும் துரோகி எனும் சொல்லை மூளை நாளங்கள் அழிக்க மறுக்கின்றன. எட்டு நாட்களும் வாஹித் அற்ற தனிமை என்னை நரகத்தினுள் தள்ளிவிடுமென்று அச்சப்படுகிறேன். முதல் காதல் எனும் இக்குறிப்புகளை இந்த நீலம் பரவிய கடலில் விட்டுச்செல்ல எண்ணுகின்றேன். அல்லது இந்த முதற்காதலை அஜாக்ஸியோவின் குப்பைத்தொட்டி ஏதேனும் ஏந்திக்கொண்டிருக்கலாம். எழுத்துகள் மலினமானவையல்ல மார்த்தி, உன் காதல் மலினமானது.  உறங்க இயலாத தனிமையிலும் உன் நினைவுகள் கொந்தளிக்கச் செய்கின்றன.

              வெரோனிக்கா என்ன செய்து கொண்டிருப்பாள்? என்னை நினைவுறுவாளா? நினைவுறும் அளவிற்கு ஏளனம் செய்தவளாயிற்றே; வாடகை கூட வேண்டாம்; அறைத்தோழியாக இருந்துகொள்ளலாம்; உன் பேராசிரியரிடம் சந்தேகங்களுக்குத் தீர்வுகளும் கேட்கலாம்; இதுபோன்ற சொற்றொடர்களால் தன்னைப் பெருந்தன்மை கொண்டவள் போல்  காட்டிக்கொண்டாள். நீ என்னை நினைப்பதற்குக்கூட பயப்படுகின்ற கோழையாயிற்றே. வெரோனிக்காவிற்குத் தெரிந்துவிடுமோ என்று நிம்மதியற்று இந்தப் பொழுதினைக் கழிப்பாய். மெத்தையில் வீழத் தோன்றுகிறது. பிறகு எழுதுகின்றேன்.

            விமான நிலையத்தில் மோதிரம் மாற்றி சான்பிரான்ஸிஸ்கோவில் வாஹித்தை கரம்கொண்டு காலங்கள் ஓடியதே தெரியவில்லை. மீண்டும் இந்த கடற்கரைக்கே வந்தமர்கின்றேன். மீண்டும் உணர்வெழுச்சியில் இந்தக் குறிப்பேடைக் கடலில் வீசிவிட்டு அடுத்த விமானத்தில் சான் பிரான்ஸிஸ்கோ செல்ல விடாய் கொண்டுள்ளேன். எட்டுநாட்கள் வரை பொறுத்திருப்பது என்பது இயேசுவின் உள்ளங்கைகளில் அடிக்கப்பட்ட ஆணிகள் மீண்டும் எனக்கு பரிசாய் கிடைப்பதைப் போன்ற உணர்வு எஞ்சுகின்றது. ஏன் இரண்டாம் காதலென்று வாஹித் என் கதாநாயகனாகக் கூடாது? முதல் என்பதற்காக மட்டும் அக்காதல் எழுதப்படவேண்டுமென்பது சட்டமில்லை. நான் வாஹித்தை மட்டுமே காதலிக்கின்றேன் மார்த்தினியோ. இந்த கசப்பான குறிப்புகள் நிறைந்த பக்கங்கள் தீயில் பொசுங்கிட வேண்டும். இந்த கடல்நீர் இவற்றை அள்ளிக்கொண்டு போகாதா? நீலம் நிறைந்த இனிமையை கசப்பால் நிறைக்க விழைவில்லை. டி61 சாலையின் எந்த குப்பைத்தொட்டியை இந்தக் குறிப்பேடு அலங்காரம் செய்யப்போகிறதென்று தெரியவில்லை.

          "ஏய் இனானா?"

            பழக்கப்பட்ட ஆணின் குரலெனத் திரும்பி நோக்கினாள். அங்கே மார்த்தினியோ அவனுக்கான வழக்கமான அழகியல் அடையாளங்களின்றி நின்றுகொண்டிருந்தான். குறிப்பேடையும் பேனாவையும் பையில் வைத்துக்கொண்டு அவனை நோக்கி எந்த உணர்வுமின்றி நடந்தாள்.

"இனானா, கடற்கன்னி போல ஆச்சரியம் ஊட்டுபவளாய் இருக்கின்றாய். உன்னை இங்கு சந்திப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. தவறவிட்ட வைரத்தைக் கண்டெடுத்தவன் போல உணர்கின்றேன்..."

"வெரோனிக்கா எப்படி இருக்கிறாள் மார்த்தி?"

            இந்தக்கேள்வியை மார்த்தினியோ எதிர்பார்த்திருப்பான். ஆனால் இத்தனை எளிதாகக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

"எங்கேனும் நலமாக இருப்பாள்..."

"உன்னைப் பார்க்கும்போதே அறிந்தேன்....அவள் நலமாக இருப்பாள்....எங்கேனும்..."

"உன் ஏளனம் என்னை நிலைகுலையச் செய்கிறது இறைவியே"

"உனது புறக்கணிப்பு எனக்காற்றிய நிலைகுலைவை விட இது குறைவுதான் மார்த்தி..."

"நீ அதே இளமையுடன் சிறுபெண்ணாகவே இருக்கின்றாய் இனானா..." சூழலை இயல்பாக்க மார்த்தினியோ பிரயத்தனப்படுவது இனானாவுக்குப் புரிந்ததால் மேலும் சூழலைக் கடினமாக்கினாள்.

"ஒரு தேவதைக்கு அம்மாவான பின்னும் அதே இளமையுடன் இருப்பதென்பது வரம் மார்த்தி, ஆனால் எண்ணங்கள் ஒரு மனைவியிடமிருந்தும் ஒரு தாயிடமிருந்தும் உருவாகுபவை, அவற்றில் உன் காதலியைத் தேடி நேரவிரயம் செய்யாதே"

"உன் சொற்கொடுக்குகளின் நஞ்சு எனக்குப் போதாது இனானா"

"நீயே விரும்பிப் பெற்றாலும் அந்நஞ்சினைக்கூட அருந்தத் தகுதியற்றவன்...மார்த்தி"

"ஆம், இருக்கலாம்..."

       அதைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஒரு காகிதத்தை எடுத்துக் கிறுக்கி அவனிடம் நீட்டினாள்.

"இதோ... என் சான் பிரான்ஸிஸ்கோ முகவரியும் தொடர்பும்... நாளை கிளம்புகிறேன்... உன்னைக் கிளம்புவதற்கு முன் சந்திப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. என் கணவனும் என் தேவதையும் உன்னை சான்பிரான்ஸிஸ்கோவில் வரவேற்க எப்போதும் தயாராக இருப்பார்கள்... வாஹித் வெரோனிக்கா மாதிரி கிடையாது... உன்னை இன்றுவரை நல்லவனென்று எனக்குச் சுட்டுபவன்...நன்றி மார்த்தினியோ... நான் கிளம்புகின்றேன்..."

           இனானா யாதொரு  பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென நடந்தாள். அருகில் நின்ற டாக்ஸியை மறித்து அறைக்குச் சென்றாள். அறையின் குப்பைத்தொட்டியில் குறிப்பேட்டை வீசிவிட்டு இரண்டு லார்ஜ் விஸ்கி ஆர்டர் செய்தாள்.  பொடித்த வெள்ளைமிளகும் உப்பும் தூவிய வெள்ளரிக்காய்த் துண்டுகளை மென்றுவிட்டு விடுதி நிர்வாகத்திடம் மறுநாளுக்கான விமானப்பயணச்சீட்டை முன்பதிவு செய்யச் சொன்னாள். மறுநாள் காலையில் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானம் ஏறினாள். இனானாவின் முகத்தில் வெளிப்பட்ட தெளிவைக் கண்ட வாஹித் ஏதும் கேட்காமல் முத்தமிட்டு வரவேற்றான்.

                மார்த்தினியோ கடல் உலவுக்கு ஒரு பயணச்சீட்டினை பதிவு செய்து கிளம்பினான். முகத்தில் கூடுதலாக நான்கு சுருக்கங்களும் பழைய அழகிய மார்த்தினியோவின் நினைவுகளும் மட்டுமே அவனிடம் எஞ்சியிருந்தன. 

        

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...