Monday, 26 July 2021

காதம்பரி தேவி

            காதம்பரி தேவி வங்காள படைப்புகள் எப்போதும் ஓர் தரிசனத்தையும் அமைதியையும் தரவல்லவை. ஒரு வங்காள நாவலையோ ஒரு வங்காள கவிதையையோ ஒரு வங்காள கலைப்படைப்பையோ தீவிரமான மனநிலையில் நுகரும்போது அது எல்லையற்ற அமைதியையும் மென்னுணர்வையும் அளிக்கும். நேற்றிரவு வங்காள திரைப்படமான காதம்பரி பார்த்தேன். 

         தாகூர் குடும்பத்தின் படைப்புகள் மீது எந்த அளவிற்கு விவாதங்களும் உரையாடல்களும் எழுந்தனவோ அதே அளவிற்கு அவர்களது குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களும் பெங்காலிகளிடையே முணுமுணுப்புகளாக உண்டு. தாகூர் குடும்பத்தின் மருமகளும் ரவீந்திரநாத் தாகூரின் அண்ணியுமான காதம்பரி தேவியின் தற்கொலை குறித்து தாகூரின் எழுத்துகள் வழியே எழுந்த உரையாடல்கள் மூலம் நூல்கள் வந்துள்ளன. அத்துடன் அவரது தற்கொலையை மையப்படுத்தி வெளியான திரைப்படம் காதம்பரி. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவில் வைக்கப்படுவதில் எனக்கு எப்போதும் உவப்பில்லை. இருப்பினும் ஓர் உறவு கலைக்கு அடிப்படையாக எழும்போது அதுகுறித்த எழுத்துக்குத் தேவை இருக்கிறது. 
      
             தன் தந்தை பணியாற்றும் தாகூர் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் வாய்ப்பு சிறுமி காதம்பரிக்கு அமைகிறது. கணவனோ தன்னைவிட பதினைந்து வயது மூத்தவர். விளையாட்டையும் பொழுதுபோக்கையும் விரும்பும் சிறுமிக்குக் குடும்பப் பொறுப்புகள் அமைகின்றன. குடும்ப பொறுப்புகளை முடித்து எஞ்சிய நேரத்தில் சிறுமியாக அவ்வீட்டில் உலாவரும்போது அதே வயதையொத்த சிறுவன் ரவீந்திரநாத் தாகூர் தன் அண்ணிக்கு நல்ல களித்தோழனாக அமைகிறார். மேலும் தன் கணவனுக்கு வேறு பெண் மீது விருப்பம் இருப்பதை அறிந்து காதம்பரி தாகூர் குடும்ப கௌரவத்திற்கான மருமகளென மட்டுமே அமைகிறாள். களித்தோழன் என்கிற உறவை பெண் எந்த வரையறைக்குள்ளும் வைக்கமுடியாது. காதலனை விட உயர்ந்தவனா எனில் ஆம், காதலனிடம் சொல்லப்படாத ரகசியங்கள் கூட களித்தோழனிடம் சொல்லப்பட்டிருக்கும். களித்தோழனிடத்தில் காதல் இருக்கும்; ஆனால் அது உடல் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. இறுக்கி அணைத்துக் கொள்ள, தோளில் சாய்ந்து கொள்ள, ரகசியங்களை கிசுகிசுக்க, ஓடிப்பிடித்து விளையாட, அரங்கில் உடன் ஆட, எல்லாவற்றையும் பேசிச் சிரிக்க, உரிமையாகக் கோபம் கொள்ள எல்லா பெண்ணிற்கும் ஒரு களித்தோழன் தேவைப்படுகிறான்.

              களித்தோழனிடத்தில் விவாகரத்து குறித்தோ, காதல்முறிவு குறித்தோ அஞ்ச வேண்டியதில்லை. காதம்பரிக்கும் ரவிக்குமான உறவு அத்தகையது. ரவிக்கும் தன் படைப்புகளுக்கான ஊற்றுமுகமாகவும் முதல்ரசிகையாகவும் அமைந்திட காதம்பரி தேவைப்படுகிறாள். காதம்பரியை தேவியாக உருவகித்து உபாசகனென வழிபடுமளவிற்கு காதம்பரியின்பால் ரவி காதல் கொள்கிறார். லண்டன் பயணத்தின் போது காதம்பரியின் பிரிவால் எழுதிய பக்னா ஹிரிதய் கவிதை நூலை காதம்பரிக்கே சமர்ப்பிக்கின்றார்.

            மறுபுறம் காதம்பரி தன் கணவரின் சகோதரி ஸ்வர்ணகுமாரியின் குழந்தை ஊர்மிளாவுடன் நேரம் செலவளிக்கிறார். கவிதையில் ஆழ்வது, இசையில் செலவிடுவது, ஊர்மிளாவுடன் விளையாடுவது போன்ற செயல்கள் மற்ற சக மேட்டிமை மருமகள்களுக்கு எரிச்சலை வரவழைக்கின்றன. ரவியுடனான உறவை சக மருமகள்கள் இழிவாகப் பேசத் துவங்குகின்றனர்; காதம்பரி கணவரை சரியாக கவனிப்பதில்லை என்கிற அலரோடு கவனமின்மையால் நிகழும் ஊர்மிளாவின் இறப்பும் காதம்பரியை மிகப்பெரிய உளச்சோர்வினுள் தள்ளுகிறது. இதற்கிடையில் ரவியும் மிருணாளிணியை மணந்து கொள்கிறார். 

         இத்தனை நாள் களித்தோழனாக இருந்த ரவி திருமணத்திற்குப் பின் அந்நியமாகிறார். இவ்வளவு காலமும் தன் உணர்வுகளையும் ரசனைகளையும் ரகசியங்களையும் அருவியாய் பொலிந்த பெண்ணால் இப்போது எதையும் அடக்கி வைக்க இயலாமல் விடுதலை கொள்ள எண்ணுகிறாள். அளவுக்கதிகமாக அபின் உட்கொண்டு தாகூர் வீட்டிலிருந்து நிரந்தரமாக விடுதலை கொள்கிறாள் காதம்பரி. தாகூர் குடும்பத்தினர் அதை ஓர் இயற்கையான மரணமென அறிவித்து அதைக் கடக்கவும் முயன்றனர். 

           ரவீந்திரநாத் தாகூரின் "Broken heart" வாசிக்கப்படும்போதெல்லாம் விடுதலையடைந்த காதம்பரி மீண்டும் அக்காதலில் வீழ விழைவாள்.

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...