Monday, 14 February 2022

ஒருநாள்...

 

வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

 

- ஆண்டாள்

 

வாடையே, எழு!
தென்றலே, வா!
என் தோட்டத்தின்மேல் வீசு!
அதன் நறுமணம் பரவட்டும்!
என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்!
அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!

 

- அதிகாரம் 4, உன்னத சங்கீதம்

 

காதலைச் சொல்வதற்கு அந்த ஒரு நாள் போதுமா? வெறும் ஒரே நாளில் என் வாழ்வில் பங்கு கொள்ளப்போகிறவனிடத்தில் நான் இந்த ஒட்டுமொத்த உணர்வைச் சொல்லிவிட முடியுமா? அவனொன்றும் எனக்கு புதியவனன்று. எத்தனையோ முறை காபிக் கோப்பைகளையும் மதுக் கோப்பைகளையும் பகிர்ந்திருக்கிறேன். அவன் என்னை நோக்குவதற்கும் பிறபெண்களை நோக்குவதற்குமான வேறுபாட்டை உணர்ந்துள்ளேன். அவனின் ரசனைகளை அறிவேன். என்னுடைய ரசனைகளை அறிந்திட வாய்ப்புகள் வழங்கியிருக்கிறேன். நான்கு முறை அலுவலக லிஃப்டில் அவனின் ஸ்பரிசத்தை உரசல்களின் ஊடே தெரிந்துள்ளேன். இவ்வளவு மட்டும் போதுமா காதலைச் சொல்வதற்கு

 

இரவு ஒன்பது மணிக்கு நகரின் முக்கியமான உயர்தர மது உணவு அரங்கிற்கு அழைத்துள்ளேன். ஒன்பது வரை அந்நாளின் அறிவிப்பைத் தள்ளிப் போட்டது என் முட்டாள்த்தனம். பிரம்ம கமலம் மலரும் தருணத்தை நோக்குவது போல ஒவ்வொரு நொடியும் அத்தனை தாமதமாய் இயங்கியது. ஒன்பது மணி வரை ஒருவேலையும் ஓடவில்லை. மதிய உணவைத் தவிர்த்தேன். கிட்டத்தட்ட ஆறு லிட்டர் தண்ணீர் அருந்தியிருப்பேன். அப்படியும் நா வறட்சி; எண்ண மறந்த அளவிற்கு சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். கைப்பையில் இருக்கும் நீலநிற கவுனை எடுத்து வந்திருக்கிறேனா என மூன்று முறைக்கு மேல் அலுவலகத்தில் சரிபார்த்து விட்டேன். பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீனா கையைப் பிடித்து ஏதும் பிரச்சனையா என அழுத்தினாள். அறையின் குளிர்தன்மை என் உடலுக்குப் போதவில்லை. உள்ளங்கைகளும் கால்களும் குளிர்ந்திருந்தன. இருப்பினும் காது பின்மடலிலிருந்து கழுத்து வழியே வியர்வை படர்ந்திருந்தது

 

அணிந்திருந்த வெள்ளை நிறச் சட்டை முதுகில் ஒட்டி நனைந்திருந்தது. இறுக்கமாகக் கொண்டையிட்டிருந்தது எப்படியோ சரிந்து கூந்தல் என் தோளில் விழ மீண்டும் சரியாகக் கொண்டை போட இயலவில்லை. இந்த ஒன்பது மணிதான் ஆகித் தொலையாதா என அலைபேசியேத் திருப்பிப் பார்த்தேன். நான்கு மணி ஆகியிருந்தது. கட்டிடத்தின் நீலம் பூசிய கண்ணாடி முகப்புகளில் பட்டு சூரியஒளிக் கற்றைகள் கோடுகளாகச் சிதறிக்கொண்டிருந்தன

 

எதிரே ஆர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். உயரமானவள், சற்றே அகலமும் பொருந்தியவள். அவளுடைய குதிரைவால் அவளை இன்னும் உயரமாகக் காட்டும். ஆனால் என்னைவிடவெல்லாம் பேரழகி இல்லை எனத் தெரியும். இருப்பினும் அவன் நான்கு முறை அவளிடம் தனியாக நின்று பேசியிருக்கிறான். அவளை அவன் பார்ப்பதை நானும் பார்த்திருக்கிறேன். என்னை நோக்குவது போல அவளைப் பார்க்கமாட்டான். ஆனால் மற்ற பெண்கள் போலவும் அவளைப் பார்க்கமாட்டான். அதுதான் சிக்கல். ஒருவேளை அவளை ஏற்கெனவே காதலிக்கின்றானோ

 

ஒருவேளை அவன் அவளைக் காதலித்துக்கொண்டிருந்தால் அந்த இரவின் ஒன்பது மணிக்கு எனக்கு நரகம் துவங்கிவிடும் என எண்ணினேன். பிறகு பிரம்ம கமலமாவது அந்திமந்தாரையாவது? அழுகை வேறு வந்தது. ஐயயோ கண் வீங்கினால் அழகாக இருக்கமாட்டோம், மஸ்காரா கலையும் என்கிற எண்ணங்கள் மேலும் வருத்தத்தை வரவழைத்தன. ஏற்கெனவே ஒரு முறை வேறு எதற்கோ அழுதபோது நீ பர்மிய பெண் மாதிரி இருக்கிறாய் என கிண்டல் செய்துவிட்டு சிகரட் புகையை முகத்தில் விட்டான். அப்போது சிரித்தேன். ஆனால் அன்றைய நாளில் இவ்வாறு நடந்தால் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது சோகமாக இருக்க நேரிடும். பேசாமல் வெறும் பாஸ்தாவும் மூன்று லார்ஜ் பிளாக் லேபிளும் அருந்தி சியர்ஸ் சொல்லிவிட்டு ஒன்பது மணியைக் கடந்துவிடலாமா எனக்கூட யோசித்தேன். ஆனால் அது ஒரு அற்புதமான நாள்; தேய்வழக்கான நாளும் கூட; ஏன் மற்ற நாட்களில் காதலைச் சொன்னால் காதல் நன்றாக இராதா என்ன? இருப்பினும் அதுவொரு இந்திரவிழா போல, புதுப்புனலென காதல் எல்லா யுவன்களின் யுவதிகளின் விழிகளிலும் வழியும். எங்கும் கவிதைகள் பாடப்படும்; முத்தங்களும் கூடல்களும் அதிகமாய் நிகழ்த்தப்பெறும். காமம் கடைந்தெடுக்கப்பட்டு அமுத மழையென அனைவரின் அறைகளினுள் பொழிந்திடும் நாளது. மன்மதன் எய்த ஐந்து மலர்களும் அன்றைய காதலர்களின் படுக்கைகளின் கிடந்து பாடுபடும் நாளது

 

மணி 5:10 எனக் காட்டியது. அவனிடமிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி, "டின்னரை நாளை வைத்துக்கொள்ளலாமா?" என்னுடைய நேரம் மட்டும் ஏன் இயற்பியல் விதிகளின் கீழ் மிக மோசமாக இயங்குகிறது என நொந்தபடி மேசையில் தலைவைத்துக் கொண்டேன். கண்டிப்பாக அப்படியானால் ஆர்த்தியுடன்தான் செல்லப்போகிறான் எனக் கருதி நீனாவை ஆர்த்தியிடம் பேச்சுக்காக இரவு உணவுக்கு அழைக்கும்படி அவள் என்ன சொல்கிறாள் என கேட்டு வரும்படி வற்புறுத்தினேன். நீனாவிடம் ஆர்த்தி விரைவாக வீட்டுக்குக் கிளம்புவதாகவும் நாளை வருவதாகவும் கூறியதை அறிந்து உறுதிப்படுத்திக்கொண்டேன்

 

கைப்பையில் இருந்த நீலகவுனின் நுனி எட்டிப்பார்த்தது. மீண்டுமொரு வாட்ஸ்அப் செய்தி, அவனிடமிருந்து. "மன்னித்துவிடு, டின்னருக்கு கண்டிப்பாக வருகிறேன், மது அரங்கில் சந்திப்போம்". உண்மையில் தலை வலிப்பது போல இருந்தது. நீனா நிலைமையைப் பார்த்து காபி வாங்கி வந்து தந்தாள். ஒரு காதலைச் சொல்வதற்குள் என்னென்ன நேர்கிறது.

 

ஒருவழியாக ஏழு மணி ஆகிவிட்டது. அவன் கிளம்பிவிட்டான். நானும் அப்போது கிளம்பி கேப் ஏறினால்தான் சரியாக ஒன்பது மணிக்குச் செல்ல முடியும். பெண்கள் அறைக்குச் சென்றேன். அடர்நீல நிற கவுனை மாற்றினேன். வெர்ஸேஸை மணிக்கட்டிலும் கழுத்திலும் பூசிக் கொண்டேன். அதுவரை உணராத மணமொன்று எழுந்தது. காஜல் மஸ்காரா சகிதத்தோடு சற்று அடர்நிற இதழ்ச்சாயம் அணிந்துவிட்டு கொண்டையைக் கழற்றினேன். முடி கீழ்முதுகு வரை படர்ந்தது. கண்ணாடியில் மிக அழகியாகத் தோன்றினேன். இதே கோலத்தில் யாரிடம் சொன்னாலும் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற கர்வம் எழுந்தது

 

காரில் அமர்ந்தேன்; 'யாமம் உய்யாமை நின்றன்று' என வெள்ளிவீதியார் பாடியதைப் போல அவ்வளவு வாகன நெரிசலில் கூட எனக்கு நேரம் நின்று போனதாகத் தோன்றியது. இதயத்துடிப்பு அதிகமாகிக் கொண்டு போனது. கலவி புரிவது கூட எளிது; ஆனால் இதோ நீ என் வாழ்விலும் நான் உன் வாழ்விலும் பங்கு கொள்ள விரும்புகிறேன் என கூறிட விழையும் தருணமென்பது மிகப் பெரியது. வெற்று இச்சை என்பது அன்றே தீர்ந்துவிடக்கூடியது; ஆபத்தற்றது. ஆனால் காதல் ஆலகால விஷம்; அதைக் காலத்திற்கும் கழுத்தில் தேக்கிட வேண்டும். கொஞ்சம் உள்ளே இறங்கினாலும் உயிர் பறித்திட வல்லது.

 

போகும் வழியெங்கிலும் இதயங்களைத் தோரணமாகத் தொங்கவிட்டிருந்தது சமூகம்; கடை வீதிகளில் காதலர் தினத் தள்ளுபடிகள்; ஒரு நாள் இத்தனை ரோஜாக்கள் இங்கு எத்தனை காதலருக்காக மலர்ந்துள்ளன? பூக்கார அக்கா எந்த வருடமும் ஒரு ரோஜா கூட மிச்சமாகவில்லை என்றார். சிவப்பு ரோஜாக்குவியலுடன் அவன் முன்பு நின்றால் என்ன சொல்லுவான்? இதுவொன்றும் எனக்கு முதல் காதலில்லை. அவனுக்கும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் எது என்னை இத்தனை மெல்லியவளாய் மீண்டும் மலரச் செய்கிறது

 

ஐயோ! உணவரங்கை அடைந்துவிட்டேன். பாலிவுட்டின் அதிசிறந்த காதல்பாடல்கள் நிரையாக இசைத்துக்கொண்டிருந்தன. என்றோ நான் பார்த்த ஷர்மிளா டாகூர்களும் டிம்பிள் கபாடியாக்களும் ஸ்ரீதேவிக்களும் கஜோல்களும் பல்வேறு திரைப்பட காதல் காட்சிகளாக பல்வேறு நாயகர்களுடன் வந்து சென்றனர்

 

பாசிப்பச்சை நிறச் முழுக்கை சட்டையும் தந்த நிற காற்சாட்டையும் அணிந்து மெல்லிய புன்னகையுடன் மேசை நான்கில் அமர்ந்திருந்தான். ஒரு நொடி யோசித்தேன், பெண்ணாகப் போய் முதலில் காதலைச் சொல்வது நன்றாகவா இருக்கும்? லஜ்ஜை கெட்டவளெனக் கருதுவானோ? அருகே சென்று அமர்ந்தேன். என் வலக்கையிலிருந்த ரோஜாக்குவியலைக் கண்டான். இடக்கையோடு பற்றியிழுத்து காதில் என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்றான்.

 

மளமளவென அழுகை வந்தது; அவன் எனக்கு புதியவனன்று; மிகவும் பழகிய ஆண்; ஒருமுறை மழையில் அவன் நனைந்தபடி குடை தந்து அனுப்பினான்; துணைக்கு பலமுறை வீடுவரை நடந்து வந்து விட்டுச் சென்றிருக்கிறான்; பலகணியில் வேடிக்கை பார்க்கும் மாலைகளில் சைக்கிளுடன் சிரித்தபடி சென்றிருக்கிறான்; உயரமும் காபியின் நிறமுமாய் எப்போதும் கச்சிதமான தோற்றத்துடன் இருப்பவன்; அன்று அணுஅணுவாய் ரகசியமாய் ரசித்த ஒருவன் என்னை நாணங்கொள்ளச் செய்ததில் முழுதாய் உருகினேன்

 

கட்டித்தழுவி லவ் யூ கூறினான்; வெறும் இரவு உணவோடு முடிந்து விடாமல் நிறைய டக்கீலா ஷாட்கள், பல்வேறு நினைவுகள் என நேரம் நகர்ந்தது. முதல் சந்திப்பு அலுவலகத்தில், அன்றைய தினம் வெளிர்நீல நிறச் சட்டையும் கருப்பு நிறக் காற்சட்டையும் அணிந்து இன் செய்து அழகான சுருள்முடியை வாரிய தலையுடன் என்னிடம் தன்னுடைய இடம் எங்கிருக்கின்றது என தயக்கத்தோடு கேட்டான். தெரியவில்லை, என் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா என்றேன். நீனா சத்தமாகச் சிரித்துவிட்டாள்; அவன் அப்போது கண்டிப்பாக ஒருநாள் அமர்வேனடி என நினைத்தானாம்; நான்தான் அதற்கும் அனுமதி அளித்துள்ளேன். அன்றைய நாளின் இனிமை வாழ்வின் எத்தருணத்தில் எண்ணும்போதும் உவகை கொள்ளச் செய்யும். இந்தக் காதல் என்றில்லை; இதற்கு முந்தைய காதல்களின் துவக்கங்களும் அவ்வாறு இனிமையானவையே

 

இதோ, அருகே என் மெத்தையில் துயில் கொள்பவன் அன்று என்னை அழச்செய்தவன் கிடையாது; சராசரியானவன். ஆம், பெண்கள் நாம் நினைக்கும் காவியநாயகனை காணும் ஆண்களிடம் தேடிக் கண்டடைகிறோம். சில நாட்களில் இவன் அவ்வாறு இல்லை என அறிய வரும்போது ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் எல்லா ஆண்களுக்குள்ளும் நம் காவிய நாயகன் சில நாட்களே எழுகிறான்; எஞ்சிய வாழ்நாளில் எல்லா ஆண்களும் சராசரி ஆண்களே. பெண்களும் அவ்வாறானவர்களே; காதலில் நிகழும் சாகசங்கள் ஒருவித விழவுகள்; அவை தினமும் நிகழா

 

மைத்துனன் தம்பி மதுசூதன் வந்து தினமும் கைத்தலம் பற்றினால் கோதையின் கனவுக்கு மதிப்புதான் ஏது?

 

 

 

 

 

 

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...