அரவம் துயிலும் பொருட்டு
மெதுவாய் அகழ்வில் ஊர
ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!
மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட
சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட
அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?
கிள்ளிடும் பொன்பாவாய்!
//
அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்
மடித்து வைத்த இழைப்பட்டு
கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்
கழற்றி எறிவானெனும் மதியின்றி
களவைத் தூண்டும் மடப்பட்டு
முந்தைய கூடலை நினைவுருத்தி
வருத்திடும் அணியிழையாய்!
//
புலரொளியில் நிலம்படர் ஈரம்
அவன் உள்ளங்கை மணம்
அந்த நாகலிங்கப் பூக்கள்
கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி
ஒற்றை பூவின் மணத்தை
மந்தணமாய் மெல்ல
கள்ளமாய் நகைத்திடும் மார்கழி
உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்
//