இரவின் சாளரம்
மெல்லிய மழைத்துளிகள்
இருளின் களிப்பாய் பொழிகின்றன
நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்
கொட்டும் துளிகளைத் தொட்டன
கந்தர்வ ஸ்பரிசமாய்
கைகளைத் தழுவிய துளிகள்
நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை
அவள் வாயிற்கதவத்தைத் தட்டின
முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக்
கடக்கும் பொழுதினில்
ஏற்பட்ட அணுக்கம் போன்றது
அவளுக்கும் அவனுக்குமான பற்று
தாமதிக்காமல் தாழ் திறந்தனள்
வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்
மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு
கழுத்தில் இறங்கியது
முழுவதுமாய் நனைந்து நிற்க
அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்
மீண்டும் பெரும் கார்முகிலொன்று
இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது
முதற்கதிர் எழும்வரை...