ஆற்றின் குறுக்கே ஒளிமிகு படகொன்று
இருண்மையின் தேவதையாய் எழுந்த செந்நிலவு
புதர்மண்டிய கரைதனில்
ஓநாய்களின் உண்டாட்டு
செழுமையான மானின் நறுங்கொழுப்பினைக் கவ்வி இழுத்துவந்து
பெண் ஓநாய்முன் போட்டு
குருதி தோய்ந்த பற்கள் நகைத்திட
காதலை மொழிந்தது ஆண் ஓநாய்
பெண் ஓநாய் நாணிக் கொழுந்துண்டை மென்றது
செந்நிலவு தேவதை ஆசியைப் பொழிந்து
ஆகாயப்பொதியினுள் மறைந்திட
ஓடத்தினின்று அவன் கை செவ்வல்லிதனை
எட்டிப்பறித்திற்று
அருகே மேகலை சுற்றிய யிடைதனை யிழுத்து
தொய்யிலிட்ட மேனிக்கு சூடினன்
ஓநாய்கள் உன்மத்தமாய் பாடின
பேரியாழின் முழக்கமென...