அவனிடம் சேராத கடிதங்கள்
அலமாரிக்குள் ஒளிந்து கிடந்தன
அவள் Scarlet வண்ண நகப்பூச்சுக்கு ஏக்கம்
காற்றில் பரவிய இருவாச்சி வாசம்
பின்னிக் கொண்ட விரல்கள்
பசையிட்ட இறுக்கம்
பின்கழுத்தில் உரசும் மீசை
பாதங்களில் என்றுமில்லாத கூச்சம்
தள்ளிவிட்டவளிடம் மெய் சொல்லவா என்றான்
அருகே இழுத்து அவள் சொல்லிய
மந்தணத்தை இரு நிழல்களும் அறியும்
கடிதங்கள் மெதுவாகத் தம்மை
வாசித்து நாணுற்றன
அலமாரி இன்னும் இறுக்கமாய் பூட்டிக்கொண்டது
மாடத்தில் படர்ந்த நிழல் கண்டு
இருவாச்சிப் பூக்கள் பசந்தன
- வெண்பா கீதாயன்