பாலைச் சுரமென இரவு
பற்றிட நன்றாய் திண்தோள்
போதிய அளவாய் அணுக்கம்
நுதல் தொட்டு மிடறிறங்கும் வியர்வை
பவழமல்லி ஸ்பரிசமாய் உறுத்தும் மீசை
அறைமுனையில் மிளிரும் இருவிழிகள்
மெதுவாய் இருளில் நகர்ந்தது
ஊடலுக்கு ஆயத்தமாகும் பூனைக்குட்டி
மேசைமேல் குதித்தது
புகைப்படச் சட்டகத்தைத் தட்டிவிட
கொள்ளை பிரியம்
புகைப்படத்தில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
தலைவனும் தலைவியும்
இன்னும் கட்டிக்கொண்டனர்
பூனை அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல்
அமைதியாய் அறைக்கு வெளியே நடந்தது
- வெண்பா கீதாயன்