Tuesday, 21 April 2026

யாமத்தின் வாசனை

துயில் மெதுவாய் கவிந்திடும் பொழுதினில் 
எவர் வரவுக்காய் அலரும் ஆம்பல்?
திரைகளை மெல்லத் தழுவிடும் வாடை
இடைமேகலையின் கனவினை அறிந்திடும்
துகிலின் நிந்தனை தாளாது
தொய்யில் இன்னும் சிவந்தது
மலர்கணை உடன் கிடந்திட
மாமுகில் பொழிந்திடும் மழையென 
மாமையை மாயையைக் களைந்திட
வாடிய வார்துகில் அவிழ்ந்திட 
வாடையின் வாடலும் கரைந்திட
மலர்ந்தனள் மற்றொரு ஆம்பலாய் மஞ்சத்தில் 
அறையெங்கும் யாமத்தின் வாசனை

Sunday, 19 April 2026

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள்
வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி 
வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ? 
பசலையுற்ற தேகம் கண்டு
முதற்கோடை மழையில் 
முழுதாய் நனைந்திடும் பிரியம்
உதிரும் மலர்களின் சபலம் 
காற்றை இறுகப் பற்றிடும்
இளவேனிற் காதல்
பின்வேனிற் களவு 
இரண்டும் மிதமாய்த் தேவையென 
விழிசிமிட்டிற்ற நிலவு
இரவெனும் விரிசடைதனில் 
எழிலணிகலன் இம்மலர்கள்
நித்திய நிலவொளியில் 
கண்ணாடி வளைகளிட்ட ஒருத்தி 
நீள்குழல்தனை அள்ளிமுடித்து
ஆடிதனை நோக்கி
அஞ்சனமிட்டு
செர்ரி மலர்க்கற்றையை
சூடிக்கொண்டனள்
மணாளனின் பார்வைதனில் 
தீக்கொன்றையாய் மாறிற்று

யாமத்தின் வாசனை

துயில் மெதுவாய் கவிந்திடும் பொழுதினில்  எவர் வரவுக்காய் அலரும் ஆம்பல்? திரைகளை மெல்லத் தழுவிடும் வாடை இடைமேகலையின் கனவினை அறிந்திடும் துகிலி...