Tuesday, 19 August 2025

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி

அவனுக்கும் அவளுக்குமிடையே

சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்

தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் 

அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்

இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள் 

சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள் 

அவளிதழின் துளிப் புன்முறுவல்

அவன் விரலைத் தீண்டிட 

நொடிநேரக் கடவுள் ஆகினன் 

மறுநொடியில் உபாசகன் 

மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள் 

வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்


Saturday, 7 June 2025

Thug life vs Adam's life



போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு படம் மோசமா எனில் நிச்சயம் கிடையாது. படம் நன்றாக இல்லை என்று விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு திரிஷா காட்சிகள்தான் காண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திரிஷா பகுதியை கத்தரித்து விட்டு இன்னும் தூக்கம் வரவைக்கும் நான்கு சண்டைக்காட்சிகளை மணி இணைத்திருந்தால் தக் இத்தனை எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார். 

திரைபடத்தின் மிகப்பெரிய குறை சண்டைக்காட்சிகள். இரண்டாம் பாதியில் அன்பறிவு மட்டுமே பெரும்பான்மையான காட்சிகளை இயக்கியது போல தோற்றம் ஏற்படுகிறது. மணிரத்னம் தனது கதாப்பாத்திரங்களை அத்தனை
எளிதாக மரணத்தில் முடித்துவிடமாட்டார். இருப்பினும் இத்திரைப்படத்தில் பலரும் சண்டைகளில் மாண்டு போகின்றனர். அத்தோடு அன்பறிவின் தாக்கம் அதீதமாகத் தெரிய காரணம் விக்ரமில் அடியாள் கூட்டத்துக்கு மத்தியில் ரோலக்ஸாக சூர்யா தோன்றும் அதே காட்சியில் இங்கே STR தோன்றி இனி தான்தான் சக்திவேல் என்கிறார். பின்னர் தக்காக ஏதாவது செய்வார் என எண்ணும்போது ஒருபுறம் கோவா, கேசினோ மறுபுறம் திருச்செந்தூர், கடல் என மணிரத்னத்தின் அழகியல் காட்சிகள் வருகின்றன. பிறகு மீண்டும் கோவா சண்டைக்காட்சிகள், படாரென தாவும் டெல்லி சண்டைக்காட்சிகள் என முதல்பாதியில் தெளிவாகக் காட்டப்பட்ட இடமும் காலமும் இரண்டாம் பாதியில் ஊசலாடுகின்றன. விக்ரம், KGF அளவிற்கான சண்டை Thug lifeக்கு தேவையில்லை. அதுவும் தற்காப்பு கலை சண்டைகள் இந்த படத்துக்கு எதற்கு எனும் வினா எழுகிறது. தமிழ் சினிமாவில் ஆபத்தான TRENDING தேய்வழக்குகள் உருவாகியுள்ளன. சாமானிய மக்களிடையே வெகு எளிதில் புழங்கும் Fruit mix பானம் போல, ஒரு திரைப்படத்தில் காமெடியா? சிறிதளவு இவர்கள், வில்லனா? இவர்களை போட்டு இரண்டு கண்டு கிண்டிவிட்டால் போதும், சாகடிக்க வேண்டுமா? அவர்களை அள்ளிப்போட்டு கதையை முடிக்கலாம், அபலையான கதாப்பாத்திரமா? இவர்களைப் போட்டு கிளறினால் முடிந்தது... இவ்வாறு தேய்வழக்காகவே தமிழ் சினிமாவில் பலர் மாறிவருகின்றனர். அன்பறிவும் அப்படியான தேய்வழக்கு Trendingஇல் சிக்கிவிட்டனரோ என்று Thug life பார்க்கும்போது தோன்றுகிறது. 

முதல் பாதி மிக அழகாக தெளிந்து செல்கின்றது. ரசிக்க வைக்கும் காட்சிகள் திரிஷா-கமல், கமல் -அபிராமி, வடிவுக்கரசி கமல், STR- கமலுக்கு நடுவே நிகழும் உரையாடல்கள், வெறும் சக்திவேல்-அமரன்- இந்திராணி ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து மட்டுமே தனித்து திரைக்கதை அமைக்கலாம். அவர்கள் மூவருக்கும் இடையே உள்ள மீறல்கள் மற்றும் சிடுக்குகள்தான் இதர கதாப்பாத்திரங்களின் தன்மையையும் கதையோட்டத்தையும் முடிவு செய்பவை. 

ஆனால் அவர்களை மையப்படுத்தாமல் காட்சிகள் எங்கெங்கோ செல்கின்றன. மேலும் இதில் சில அடிப்படைக் காட்சிகள் வசனங்களாக பேசப்பட்டு கடந்து போய் விடுகின்றன. உதாரணமாக கமல் ஒரு காட்சியில் அபிராமியை கிட்சனில் சமாதானப்படுத்தும் ஊடல் காட்சியில் முதல் சந்திப்பை மூன்றுவரி வசனமாகப் பேசிக் கடப்பார். அது காட்சியாக மாறியிருந்தால் அழகியல். 

மகாபாரதத்தில் சாந்தனு சத்தியவதியை மணம் செய்துகொள்ளும்போது சாந்தனுவின் மகன் தேவவிரதன் எனும் பீஷ்மன் துறவுகொள்வான். ஒருவேளை தேவவிரதனும் சத்தியவதி மீது காதல்கொண்டிருந்தால் என்னவாகும் என ஒரு கிளாசிக் திரைப்படமாக/ திரைக்கதையாக வரவேண்டிய Adam's Life, Thug life ஆகி பாதை மாறி 'பரவாயில்லை பார்க்கலாம்' commercial ரகமாக நிற்கின்றது.

Friday, 10 January 2025

பாவை மொழிகள் (4 - 6)

அரவம் துயிலும் பொருட்டு

மெதுவாய் அகழ்வில் ஊர

ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!

மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட

சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட

அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?

கிள்ளிடும் பொன்பாவாய்!

//

அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்

மடித்து வைத்த இழைப்பட்டு

கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்

கழற்றி எறிவானெனும் மதியின்றி

களவைத் தூண்டும் மடப்பட்டு

முந்தைய கூடலை நினைவுருத்தி

வருத்திடும் அணியிழையாய்!

//

புலரொளியில் நிலம்படர் ஈரம்

அவன் உள்ளங்கை மணம்

அந்த நாகலிங்கப் பூக்கள்

கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி

ஒற்றை பூவின் மணத்தை

மந்தணமாய் மெல்ல

கள்ளமாய் நகைத்திடும் மார்கழி

உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்

//

Wednesday, 18 December 2024

பாவை மொழிகள் - 3

வைகறைத் தூறல் நிலம் நனைக்க

உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்

விண்ணுலகிலும் அலருமென 

கந்தர்வன் அளித்ததன் கொடையவை

ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும் 

கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்

துவள்விழியைத் திறந்திடுமின்! 

பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்! 

Tuesday, 17 December 2024

பாவை மொழிகள் - 2

அஞ்சனமிடாத விழிகள் 

துயில் துறந்து விரிந்திட

சாளரம் விளிக்கின்ற வாசனை 

சிலம்புடைந்த பரலென 

சிதறும் தென்னமொக்குகாள்! 

உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்

நின் விழிநிறை அறியாது மடவாய்! 

பாவை மொழிகள் - 1

கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று

தேகம் அணைத்திடும் குளிர்

பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு

புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்

கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள் 

முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்

விழிதிறவாய் எம்பாவாய்!



Monday, 18 November 2024

மகன்றில் களவு 20

ஏதோவொரு கிரேக்க தெய்வத்தின் சாயல் அவன் 

சில தருணங்களில் டாஃப்னியைப் பின்தொடரும் அப்பலோ

பல இரவுகளிலும் சில பகல்களிலும் டையனஸிஸ்

தற்போது தொலைவில் எங்கோ

துணையாய் அவன் போர்வையின் வெப்பம் 

இன்னும் சில நினைவுச் சிதறல்கள் 

வானின் மேகங்களென 

மெதுவாய்ப் படர்ந்து கரைந்திட 

விழிநிறை நெடுவானின் 

நீலமுமாய் அவன் 

மீண்டும் தெய்வத்தின் கூர்மூக்குத் தீண்டல் வரையில் 

போதுமிந்த கொள்ளா நீலம்


- வெண்பா கீதாயன் 

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...