Wednesday, 25 October 2023

மகன்றில் களவு 7

கடிகையின் முள் நகர்வுகளை நோக்கி
தவம் செய்தது தாபம்
நாளும் அல்லும் அவள் இருத்தலை அறியாது
பொறுமையாய் நகர்ந்தன
சிதறிக்கிடந்த மென்முல்லைகள் 
அணிகளற்ற கூந்தல்
கலையாத தொய்யில்
துயில் மறந்த விழிகள்
வரவின் பொருட்டு வாயிலை நோக்கின
அவன் தலையணை சேமித்த வாசனை
தற்போதைக்கு ஆற்றும் குளிகை
இடை நில்லா கலிங்கத்தை
இழுத்து வளைத்திட
அறுபொழுதும் ஓய்ந்து கிடக்கின்றன
அறிவையை அறியாது இருக்கும் அவன் வன்நெஞ்சு காத்திருக்கும் கடிகைக்கேனும்
மோட்சம் அளிக்கட்டும் 

Monday, 23 October 2023

மகன்றில் களவு 6

இந்த யாமத்தில் அவிழும் முகிழின்
ஒரு துளி மதுவினும் பேரினிமை
அவன் மிச்சம் வைத்த தேறல்
குறையற்ற யாழின் நரம்புகள்
அணிச்சரமென கோர்த்திட
ஒளிர்நிலவின் தண்மை
மெதுவாய் கரைந்திட
உரசிய தோள்கள் அறியும்
உண்மை நிலைதனை
அனைத்தும் மாயை
தன்னினிமையே மெய்யென
நகைத்தது தேறலின் கடைத்துளி 
யாமமோ கடந்திட மறந்து துயின்றது
அவன்மேல் சரிந்தவள் மெதுவாய் மொழிந்தாள்
துயிலும் இரவுதனை எழுப்பி விடாதேயென்று

- வெண்பா கீதாயன் 

Saturday, 7 October 2023

மகன்றில் களவு 5

துள்ளி வரும் அலைகளின் நீலம்

ஒட்டிக் கொண்டது பாதங்களில்

கூடலில் இருந்த நண்டுகளிடையே முணுமுணுப்பு 

கோர்த்துக்கொண்ட கரங்களுள் இருந்த வெப்பத்தில்

வான்வெளியில் இருந்து உருகிப் பொழிந்த உடுக்கள்

இறுக்கத்தில் தளர்ந்த முகில்கள் 

நாணமேதுமற்று ஒளிரும் வெண்கீற்று

ஸ்பரிசத்துடன் கலந்த மணல்

இருள்தான் இன்னுமொரு பொழுது நீடிக்கட்டும்

இத்தனை மிளிர்வுகளுக்கு இன்னொரு தருணம் அரிது

- வெண்பா கீதாயன் 

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...