எங்கோ தொலைவில் இசைக்கும் கசல்
மீள மீள
ஈரடி சந்தங்கள்
அன்பைச் சொல்ல இத்தனை சொற்கள்
எத்தனை நிலவுகளைக் கண்டிருக்கும் இப்பிரியம்
நிலவற்ற நாளிலும் கூட பிணைந்திருக்கும்
ஆறு பருவங்களை சந்தித்திருக்கும்
எதிரெதிரே சந்தித்த விழிகள் சொல்லாத களவினை
சொற்களால் அணிசெய்தல் அரிது
எவ்வளவு கரவுகளை உள்ளம் கொள்ளும்
இரவுகளின் முணுமுணுப்பு போல
பாலை மொழியின் இசை தரும் தண்மை
என்றோ சந்தித்த விழிகளின் களவு
அவளது யாழ் மீட்டியது
ஈரடி சந்தங்கள்
மீள மீள
- வெண்பா கீதாயன்