Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, 5 September 2026

ஆசிரியர் தினம்

பெற்றோருக்கு அடுத்து குழந்தைகள் தங்கள் வாழ்வில் சந்திக்கின்ற பெரியவர்கள் ஆசிரியர்கள். எனக்கு பள்ளி துவங்கி கல்லூரி வரை நல்ல ஆசிரியர்கள் கிடைத்துள்ளனர். என்னுடைய ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியையின் ஊக்கமும் ஆசிகளும்தான் என்னை இத்தனை தூரம் இழுத்து வருகின்ற விசை. ஆசிரியர்கள் யார், அவர்களது கடமை, அருமை போன்றவை என்ன என்பது இன்றைய மாணவர்கள், குறிப்பாக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் Plastic பள்ளி மாணவர்களுக்கு புரியாது. ஏனெனில் அங்கே பள்ளி ஒரு ஷங்கர் பட செட், ஆசிரியர்கள் ஆர்ட்டிஸ்ட்கள்; படிப்பது போல ஒரு பெரிய கற்றல் நாடகம் அங்கே நிகழ்கிறது. Projects, activity, அது, இது என எப்போதும் ஒரு போலியான பரபரப்பு நிகழ்ந்த படி இருக்கிறது. அறம், ஒழுக்கம், அன்பு, இதர உணர்வுகள் போன்றவற்றை அங்கே எதிர்பார்க்க முடியாது. இந்தச் சூழலில் வளர்கிற குழந்தைகளின் எதிர்காலம் tailoredஆக இருக்கும். ஒருவேளை குழந்தையின் எதிர்காலம் நினைத்தது போல இல்லை என்றாலும் லட்சக்கணக்கில் Fees கட்டுகிற பெற்றோரால் அந்தக் குழந்தைக்கு அதே லட்சங்களால் ஏதோவொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிட முடியும். 

ஆனால் இலவச கல்வியை நம்பி அரசுப்பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்ற மாணவ மாணவியருக்கு அங்கு கற்றுத்தருகிற ஆசிரியர்கள் மட்டும்தான் எதிர்காலம். அத்தகைய மாணவ மாணவியரின் பெற்றோர் வீட்டு வேலைகள் செய்பவர்களாகவும் எளிய வியாபாரிகளாகவும் அன்றாடக் கூலிகளாகவும் சிறைக்கைதிகளாகவும் இன்னும் பிற பிழைப்புகளை நம்பியிருப்பவர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய வீட்டுக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைத்தரம் உயர அவர்களுக்கு கல்வியைத் தவிர பிடிமானமுள்ள வாய்ப்பு வேறில்லை. 

நான் அப்படியான குடும்பச்சூழல் கொண்ட மாணவிகளுடன் பயின்று இருக்கிறேன். இன்றைக்கு அந்த சகமாணவியர் அனைவருமே அரசு வேலைகளிலும், professionalsஆகவும், ஆசிரியைகளாகவும், காவல்துறையிலும் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டதற்கு முக்கிய காரணம் எங்கள் ஆசிரியைகள். எங்கள் teenage சேட்டைகளை judge செய்யாமல் அறிவுரை கூறி, எங்களை எப்போதுமே conscious modeஇல் வைத்திருந்த ஆசிரியைகளுக்கு நன்றிகள். 

அதேபோல இன்று ஆசிரியர்களாக இருப்பவர்களும் முடிந்த அளவுக்கு judge செய்யாமல், இவன் இப்படிதான்/ இவள் இப்படிதான் போன்ற முன்முடிவுகளுக்கு வராமல் தனியாக அழைத்து அவர்களது பிரச்சனைகளை கேளுங்கள்; ஒரு குழந்தையை அப்போது செய்கிற தவறுக்காக அடையாளப் பட்டம் கட்டினால் அது அக்குழந்தையின் எதிர்காலத்தை அழித்துவிடும் என்கிற பிரக்ஞையோடு மாணவர்களை அணுகுங்கள். ஏனெனில் என் வீட்டில் சொல்லிக்கூட கேட்காமல் இருந்திருக்கிறேன். ஆனால் மிஸ் சொல்லியதை ஒருநாளும் தட்டியதில்லை. 

Friday, 14 August 2026

காதல் - Madness vs Toxic



காதல் என்கிற உணர்வு முற்றிலும் madness சார்ந்தது. இயல்பாகவோ logicalஆகவோ consciousஆகவோ ஒருவர் இருந்தால் காதலில் விழவே முடியாது. தைரியமாக இருவரும் அந்த உன்மத்தத்தை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் காதலர்களாக மாறுகிறார்கள். 

தொடக்கத்தில் புதிதாக வாங்கிய சைனா டிரான்ஸிஸ்டர் போல இந்தக் காதல் அன்ட்டனா உயர்த்தாமல் இனிய பாடல்களுடன் ஜாலியாகப் போகும். பிறகு sync இல்லாமல் antennaவை உயர்த்தும் தருணங்கள் எழும். இங்குதான் convinceஆவது, adjustஆவது, சகித்துக் கொள்வது, ஊடல்கள் சண்டையாக மாறி திரும்ப சமாதானம் ஆவது போன்ற அடுத்த நிலைக்கு போகும். இந்த நிலைக்கு செல்லும் போது காதலில் 6 மாதம் to 1 வருடம் ஆகியிருக்கும். 

அடுத்த நிலை break up zone, இதில் டிரான்ஸிஸ்டரில் இருந்து இரைச்சல் மட்டுமே எஞ்சும். போன வருடம் க்யூட்டாக தெரிந்ததெல்லாம் இப்போது கடுப்பாகும். இந்த சமயத்தில் physical violence, verbal abuse போன்ற நிகழ்வுகள் நடந்தால் toxic relationship என்று break up செய்யலாம். ஆனால் அப்படி இல்லாமல் mood swing கிச்சுகிச்சு சண்டைகள், திரும்ப மன்னிப்புகள், கொஞ்சநாள் space எடுத்துக் கொண்டு திரும்ப காதலிப்பது, ஒரு vacation கூட்டிச் சென்று சமாதானப் படுத்துவது, எப்படியாவது இந்த காதலை காப்பாற்றி விட வேண்டும் என இருவரில் ஒருவர் நினைக்கும் பட்சத்தில் மற்றொருவர் தன்னுடைய இணை narcissist, selfish, insecured, love bombing செய்பவர், control செய்பவர், சிறை போல இருந்தேன் என கூறி அந்த relationshipல் கழன்று கொள்வார். ஆண், பெண் இருபாலரும் இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். 

இதில் ஆண்கள் இப்படி புலம்பும் போது இரக்கம், ஆதரவு கிடைக்காமல் பரிதாபம் எஞ்சும், சில நேரங்களில் அந்த காதலி அழகாக இருந்தால் backfire ஆகும் ஆபத்தும் உள்ளது. அதே பெண்கள் சொல்லும் போது அடுத்த சைனா டிரான்ஸிஸ்டராக மாற ஆண்களே ஆமோதித்து அப்பெண்ணை ஊக்குவித்து கைத்தட்டுகின்றனர். 

அனுபமா வரையறுக்கின்ற பண்புகளில் பல பெண்கள் தங்களுடைய இணைகளிடம் நடந்து கொண்டாலும் அது mood swings என்று ஒற்றை வார்த்தையில் கடக்கப்படுகிறது. ஆனால் ஆண்களை toxicஆக frame செய்வது எளிதாக இருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை ஒரு relationshipஇல் இருந்து பிரிந்தால் கண்ணியமாக இருவரும் past குறித்து பொதுவில் பேசாமல் பழைய காதலின் இனிமையுடன் விடை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை பேசினால் betterஆக இருக்கும் எனில் நம்முடைய therapist அல்லது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் கெட்ட வார்த்தையில் கூட திட்டிக் கொள்ளலாம். ஆனால் பொதுவில் பழைய காதலன் குறித்து பேசுவது பழிவாங்கல் தவிர்த்து வேறு ஒன்றுமில்லை. 


#anupamaparameshwaran

Saturday, 8 August 2026

பார்வதி - தாஸ் & சந்திரா - வழிப்போக்கர்களின் பழிவாங்கல் கதை


வெகுநாட்களுக்குப் பிறகு 2010களின் ஒளி, காட்சியமைப்பு, நிலப்பரப்பு என அனைத்தும் நினைவுகூரப்படும் வகையில் கச்சிதமாக அருண் மாதேஸ்வரனால் செதுக்கப்பட்டுள்ளன. CCTV காமிராக்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழ்ந்த அநீதிகளும் அதற்கான பழிவாங்கும் படலமுமே கதை. கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், அதற்காக சிந்தும் குருதி என கதையில் மனிதனின் IDயும் egoவும் Adrenaline rushஐ அதிகரிக்கச் செய்கின்றன. 

உளவியலாளர்கள் பலரும் உளவியலில் ஒரு மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகளை அவனது குழந்தைப்பருவம் தீர்மானிக்கும் என்பார்கள். DCயின் கதைமாந்தர்கள் அனைவருக்கும் இந்த Childhood trauma இருக்கிறது. பெரியவர்களாக மாறிய பிறகு அந்த inner childrenஇன் போராட்டம்தான் திரைக்கதை. 

இங்கே பெரியவர்கள் ஆன பின் குழந்தைப்பருவ காயங்களை மறந்து விடுவோம், அல்லது அதை cope up செய்ய கல்வி, வாசிப்பு, வேலைவாய்ப்பு, வசதி, பணம், போதை, கலவி என எதற்குள்ளாவது புகுந்துகொண்டு வெளியே நம் பால்ய இருண்மைகளை மறைத்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால் இதற்கான வாய்ப்பற்றவர்கள் நிகழ்கால இருண்மையில் உழல்பவர்கள் மீள்வதற்கு பதிலடியாக வன்முறையை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அதை லோகேஷ் நடிப்பில் அற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார், தன்னை தேவதாஸாக முழுதாக அருணிடம் ஒப்படைத்துள்ளார். 

அதேபோல சந்திராவும் ஒரு மருத்துவரைத் தனக்கு கடந்த காலத்தில் நிகழ்த்திய அநீதிக்காக கன்னாபின்னாவென சுடுவார். பார்வதியும் தன்னுடைய ஆசையைத் தருணமாக வாழ்ந்துவிடுவார். இறுதியில் தாஸும் சந்திராவும் தமக்குக் கிடைக்காத குழந்தைப்பருவத்தை இன்னொரு சிறுவனுக்கு அளித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்கின்றனர். 

DC திரைப்படமானது inner child குறித்த பிரக்ஞை அற்றவர்கள் அல்லது நல்ல குழந்தைப்பருவம் கொண்டவர்கள், past trauma அற்றவர்களுக்கு வெறும் வன்முறையாக அல்லது தேவையற்றதாகத் தோன்றும். எப்போதும் LEDக்களுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கு இருண்மை கூச்சத்தைத் தரும். Devadas Chandra அந்த இருண்மையின் மின்மினிகள்.

#DC

Saturday, 7 June 2025

Thug life vs Adam's life



போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு படம் மோசமா எனில் நிச்சயம் கிடையாது. படம் நன்றாக இல்லை என்று விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு திரிஷா காட்சிகள்தான் காண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திரிஷா பகுதியை கத்தரித்து விட்டு இன்னும் தூக்கம் வரவைக்கும் நான்கு சண்டைக்காட்சிகளை மணி இணைத்திருந்தால் தக் இத்தனை எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார். 

திரைபடத்தின் மிகப்பெரிய குறை சண்டைக்காட்சிகள். இரண்டாம் பாதியில் அன்பறிவு மட்டுமே பெரும்பான்மையான காட்சிகளை இயக்கியது போல தோற்றம் ஏற்படுகிறது. மணிரத்னம் தனது கதாப்பாத்திரங்களை அத்தனை
எளிதாக மரணத்தில் முடித்துவிடமாட்டார். இருப்பினும் இத்திரைப்படத்தில் பலரும் சண்டைகளில் மாண்டு போகின்றனர். அத்தோடு அன்பறிவின் தாக்கம் அதீதமாகத் தெரிய காரணம் விக்ரமில் அடியாள் கூட்டத்துக்கு மத்தியில் ரோலக்ஸாக சூர்யா தோன்றும் அதே காட்சியில் இங்கே STR தோன்றி இனி தான்தான் சக்திவேல் என்கிறார். பின்னர் தக்காக ஏதாவது செய்வார் என எண்ணும்போது ஒருபுறம் கோவா, கேசினோ மறுபுறம் திருச்செந்தூர், கடல் என மணிரத்னத்தின் அழகியல் காட்சிகள் வருகின்றன. பிறகு மீண்டும் கோவா சண்டைக்காட்சிகள், படாரென தாவும் டெல்லி சண்டைக்காட்சிகள் என முதல்பாதியில் தெளிவாகக் காட்டப்பட்ட இடமும் காலமும் இரண்டாம் பாதியில் ஊசலாடுகின்றன. விக்ரம், KGF அளவிற்கான சண்டை Thug lifeக்கு தேவையில்லை. அதுவும் தற்காப்பு கலை சண்டைகள் இந்த படத்துக்கு எதற்கு எனும் வினா எழுகிறது. தமிழ் சினிமாவில் ஆபத்தான TRENDING தேய்வழக்குகள் உருவாகியுள்ளன. சாமானிய மக்களிடையே வெகு எளிதில் புழங்கும் Fruit mix பானம் போல, ஒரு திரைப்படத்தில் காமெடியா? சிறிதளவு இவர்கள், வில்லனா? இவர்களை போட்டு இரண்டு கண்டு கிண்டிவிட்டால் போதும், சாகடிக்க வேண்டுமா? அவர்களை அள்ளிப்போட்டு கதையை முடிக்கலாம், அபலையான கதாப்பாத்திரமா? இவர்களைப் போட்டு கிளறினால் முடிந்தது... இவ்வாறு தேய்வழக்காகவே தமிழ் சினிமாவில் பலர் மாறிவருகின்றனர். அன்பறிவும் அப்படியான தேய்வழக்கு Trendingஇல் சிக்கிவிட்டனரோ என்று Thug life பார்க்கும்போது தோன்றுகிறது. 

முதல் பாதி மிக அழகாக தெளிந்து செல்கின்றது. ரசிக்க வைக்கும் காட்சிகள் திரிஷா-கமல், கமல் -அபிராமி, வடிவுக்கரசி கமல், STR- கமலுக்கு நடுவே நிகழும் உரையாடல்கள், வெறும் சக்திவேல்-அமரன்- இந்திராணி ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து மட்டுமே தனித்து திரைக்கதை அமைக்கலாம். அவர்கள் மூவருக்கும் இடையே உள்ள மீறல்கள் மற்றும் சிடுக்குகள்தான் இதர கதாப்பாத்திரங்களின் தன்மையையும் கதையோட்டத்தையும் முடிவு செய்பவை. 

ஆனால் அவர்களை மையப்படுத்தாமல் காட்சிகள் எங்கெங்கோ செல்கின்றன. மேலும் இதில் சில அடிப்படைக் காட்சிகள் வசனங்களாக பேசப்பட்டு கடந்து போய் விடுகின்றன. உதாரணமாக கமல் ஒரு காட்சியில் அபிராமியை கிட்சனில் சமாதானப்படுத்தும் ஊடல் காட்சியில் முதல் சந்திப்பை மூன்றுவரி வசனமாகப் பேசிக் கடப்பார். அது காட்சியாக மாறியிருந்தால் அழகியல். 

மகாபாரதத்தில் சாந்தனு சத்தியவதியை மணம் செய்துகொள்ளும்போது சாந்தனுவின் மகன் தேவவிரதன் எனும் பீஷ்மன் துறவுகொள்வான். ஒருவேளை தேவவிரதனும் சத்தியவதி மீது காதல்கொண்டிருந்தால் என்னவாகும் என ஒரு கிளாசிக் திரைப்படமாக/ திரைக்கதையாக வரவேண்டிய Adam's Life, Thug life ஆகி பாதை மாறி 'பரவாயில்லை பார்க்கலாம்' commercial ரகமாக நிற்கின்றது.

Monday, 26 July 2021

காதம்பரி தேவி

            காதம்பரி தேவி வங்காள படைப்புகள் எப்போதும் ஓர் தரிசனத்தையும் அமைதியையும் தரவல்லவை. ஒரு வங்காள நாவலையோ ஒரு வங்காள கவிதையையோ ஒரு வங்காள கலைப்படைப்பையோ தீவிரமான மனநிலையில் நுகரும்போது அது எல்லையற்ற அமைதியையும் மென்னுணர்வையும் அளிக்கும். நேற்றிரவு வங்காள திரைப்படமான காதம்பரி பார்த்தேன். 

         தாகூர் குடும்பத்தின் படைப்புகள் மீது எந்த அளவிற்கு விவாதங்களும் உரையாடல்களும் எழுந்தனவோ அதே அளவிற்கு அவர்களது குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களும் பெங்காலிகளிடையே முணுமுணுப்புகளாக உண்டு. தாகூர் குடும்பத்தின் மருமகளும் ரவீந்திரநாத் தாகூரின் அண்ணியுமான காதம்பரி தேவியின் தற்கொலை குறித்து தாகூரின் எழுத்துகள் வழியே எழுந்த உரையாடல்கள் மூலம் நூல்கள் வந்துள்ளன. அத்துடன் அவரது தற்கொலையை மையப்படுத்தி வெளியான திரைப்படம் காதம்பரி. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவில் வைக்கப்படுவதில் எனக்கு எப்போதும் உவப்பில்லை. இருப்பினும் ஓர் உறவு கலைக்கு அடிப்படையாக எழும்போது அதுகுறித்த எழுத்துக்குத் தேவை இருக்கிறது. 
      
             தன் தந்தை பணியாற்றும் தாகூர் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் வாய்ப்பு சிறுமி காதம்பரிக்கு அமைகிறது. கணவனோ தன்னைவிட பதினைந்து வயது மூத்தவர். விளையாட்டையும் பொழுதுபோக்கையும் விரும்பும் சிறுமிக்குக் குடும்பப் பொறுப்புகள் அமைகின்றன. குடும்ப பொறுப்புகளை முடித்து எஞ்சிய நேரத்தில் சிறுமியாக அவ்வீட்டில் உலாவரும்போது அதே வயதையொத்த சிறுவன் ரவீந்திரநாத் தாகூர் தன் அண்ணிக்கு நல்ல களித்தோழனாக அமைகிறார். மேலும் தன் கணவனுக்கு வேறு பெண் மீது விருப்பம் இருப்பதை அறிந்து காதம்பரி தாகூர் குடும்ப கௌரவத்திற்கான மருமகளென மட்டுமே அமைகிறாள். களித்தோழன் என்கிற உறவை பெண் எந்த வரையறைக்குள்ளும் வைக்கமுடியாது. காதலனை விட உயர்ந்தவனா எனில் ஆம், காதலனிடம் சொல்லப்படாத ரகசியங்கள் கூட களித்தோழனிடம் சொல்லப்பட்டிருக்கும். களித்தோழனிடத்தில் காதல் இருக்கும்; ஆனால் அது உடல் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. இறுக்கி அணைத்துக் கொள்ள, தோளில் சாய்ந்து கொள்ள, ரகசியங்களை கிசுகிசுக்க, ஓடிப்பிடித்து விளையாட, அரங்கில் உடன் ஆட, எல்லாவற்றையும் பேசிச் சிரிக்க, உரிமையாகக் கோபம் கொள்ள எல்லா பெண்ணிற்கும் ஒரு களித்தோழன் தேவைப்படுகிறான்.

              களித்தோழனிடத்தில் விவாகரத்து குறித்தோ, காதல்முறிவு குறித்தோ அஞ்ச வேண்டியதில்லை. காதம்பரிக்கும் ரவிக்குமான உறவு அத்தகையது. ரவிக்கும் தன் படைப்புகளுக்கான ஊற்றுமுகமாகவும் முதல்ரசிகையாகவும் அமைந்திட காதம்பரி தேவைப்படுகிறாள். காதம்பரியை தேவியாக உருவகித்து உபாசகனென வழிபடுமளவிற்கு காதம்பரியின்பால் ரவி காதல் கொள்கிறார். லண்டன் பயணத்தின் போது காதம்பரியின் பிரிவால் எழுதிய பக்னா ஹிரிதய் கவிதை நூலை காதம்பரிக்கே சமர்ப்பிக்கின்றார்.

            மறுபுறம் காதம்பரி தன் கணவரின் சகோதரி ஸ்வர்ணகுமாரியின் குழந்தை ஊர்மிளாவுடன் நேரம் செலவளிக்கிறார். கவிதையில் ஆழ்வது, இசையில் செலவிடுவது, ஊர்மிளாவுடன் விளையாடுவது போன்ற செயல்கள் மற்ற சக மேட்டிமை மருமகள்களுக்கு எரிச்சலை வரவழைக்கின்றன. ரவியுடனான உறவை சக மருமகள்கள் இழிவாகப் பேசத் துவங்குகின்றனர்; காதம்பரி கணவரை சரியாக கவனிப்பதில்லை என்கிற அலரோடு கவனமின்மையால் நிகழும் ஊர்மிளாவின் இறப்பும் காதம்பரியை மிகப்பெரிய உளச்சோர்வினுள் தள்ளுகிறது. இதற்கிடையில் ரவியும் மிருணாளிணியை மணந்து கொள்கிறார். 

         இத்தனை நாள் களித்தோழனாக இருந்த ரவி திருமணத்திற்குப் பின் அந்நியமாகிறார். இவ்வளவு காலமும் தன் உணர்வுகளையும் ரசனைகளையும் ரகசியங்களையும் அருவியாய் பொலிந்த பெண்ணால் இப்போது எதையும் அடக்கி வைக்க இயலாமல் விடுதலை கொள்ள எண்ணுகிறாள். அளவுக்கதிகமாக அபின் உட்கொண்டு தாகூர் வீட்டிலிருந்து நிரந்தரமாக விடுதலை கொள்கிறாள் காதம்பரி. தாகூர் குடும்பத்தினர் அதை ஓர் இயற்கையான மரணமென அறிவித்து அதைக் கடக்கவும் முயன்றனர். 

           ரவீந்திரநாத் தாகூரின் "Broken heart" வாசிக்கப்படும்போதெல்லாம் விடுதலையடைந்த காதம்பரி மீண்டும் அக்காதலில் வீழ விழைவாள்.

ஆசிரியர் தினம்

பெற்றோருக்கு அடுத்து குழந்தைகள் தங்கள் வாழ்வில் சந்திக்கின்ற பெரியவர்கள் ஆசிரியர்கள். எனக்கு பள்ளி துவங்கி கல்லூரி வரை நல்ல ஆசிரியர்கள் கிடை...