Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, 31 July 2026

முதற்களவு

திறந்து கிடந்த கதவுகள் 
ஆரஞ்சுப் பூனையாக நுழைந்தேன் 
அடுக்களையிலிருந்து பரவும் மணம் 
சட்டையின் கைமடிப்புகளில் வியர்வை 
எனக்கான விருந்தின் இறுதிகட்டம் 
சத்தமேதுமற்று அவன் முதுகில் கன்னம் பதிந்திட அணைப்பு
வெளியே மழையும் மண்ணும் கலவிடும் மணம்
கழுத்தென்று நினைத்து எங்கோ அச்சிட்ட முத்தம்
முதற்களவின் அசட்டுத்தனம்
பொருளற்ற சிரிப்பு
மேசையில் அடுக்கப்பட்ட விருந்து
அன்பின் அடுக்குகளாய் லஸான்யே
முத்தத்தின் இனிமையாய் பிரௌனி
களவின் நிமித்தமாய் ஃபென்னி
பின்னால் இசைத்திடும் செல்லோ
காற்றுடன் தழுவிடும் திரைச்சீலைகள் 
அவன் மொழியறியாது என் மொழி 
இருப்பினும் அவன் விரல்களுள் இசைந்திடும் விரல்கள் 
களவில் விழிகடந்து மொழிக்கென்ன வேலை? 
சமைத்திற்ற கைகளுக்கு அளித்திடப் போதவில்லை! 

Sunday, 5 July 2026

நிகரிலி நறவு

அந்த அறையில் அவர்களுள் எந்தப் பரிச்சயமும் தேவைப்படவில்லை 
அவள் அலெசாந்ரோவின் வீனஸ் என நின்றிருந்தாள்
அறையின் உறைகுளிர் உணர்விலில்லை 
தழுவலில் என்ன உன்மத்தம்?
வாசனை!
விரல்களில் இதழிட சிகரெட் 
பின்கழுத்தில் ஏவாள் கடித்த ஆப்பிள்
மிடற்றில் சவரம் செய்த திரவ நறுமணம் 
வியர்வையில் விஸ்கி 
கைகளில் அவன் கொண்டு வந்த பியோனி மலர்கள்
இத்தனை அடுக்கு வாசனைக்குறிப்பு 
சுவர்க்கத்திலும் கிட்டாது
கற்றை முடியைப் பற்றிக்கொண்டு 
அருநறவுதனை உயிரினில் தோய்த்தனள்

Sunday, 7 June 2026

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள்
தெரிகின்ற பசுமைக் காடுகள் 
அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண் 
தும்பிகளின் கூடற்களி 
மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைகள்
பாறைகளில் அவிழ்ந்து நிற்கும் கதிர்காந்தப்பூக்கள் 
அவன் மெதுவாக இமைத்து 
மீண்டும் நோக்கினான்
இவ்விழிகளுள் தொலைவதைவிட வேறென்ன பேரின்பம்
அம்மரகதக் காட்டினில்
கதிர்காந்தப்பூ கொண்டு 
காவியங்கள் படைத்தனள்

Tuesday, 21 April 2026

யாமத்தின் வாசனை

துயில் மெதுவாய் கவிந்திடும் பொழுதினில் 
எவர் வரவுக்காய் அலரும் ஆம்பல்?
திரைகளை மெல்லத் தழுவிடும் வாடை
இடைமேகலையின் கனவினை அறிந்திடும்
துகிலின் நிந்தனை தாளாது
தொய்யில் இன்னும் சிவந்தது
மலர்கணை உடன் கிடந்திட
மாமுகில் பொழிந்திடும் மழையென 
மாமையை மாயையைக் களைந்திட
வாடிய வார்துகில் அவிழ்ந்திட 
வாடையின் வாடலும் கரைந்திட
மலர்ந்தனள் மற்றொரு ஆம்பலாய் மஞ்சத்தில் 
அறையெங்கும் யாமத்தின் வாசனை

Sunday, 19 April 2026

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள்
வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி 
வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ? 
பசலையுற்ற தேகம் கண்டு
முதற்கோடை மழையில் 
முழுதாய் நனைந்திடும் பிரியம்
உதிரும் மலர்களின் சபலம் 
காற்றை இறுகப் பற்றிடும்
இளவேனிற் காதல்
பின்வேனிற் களவு 
இரண்டும் மிதமாய்த் தேவையென 
விழிசிமிட்டிற்ற நிலவு
இரவெனும் விரிசடைதனில் 
எழிலணிகலன் இம்மலர்கள்
நித்திய நிலவொளியில் 
கண்ணாடி வளைகளிட்ட ஒருத்தி 
நீள்குழல்தனை அள்ளிமுடித்து
ஆடிதனை நோக்கி
அஞ்சனமிட்டு
செர்ரி மலர்க்கற்றையை
சூடிக்கொண்டனள்
மணாளனின் பார்வைதனில் 
தீக்கொன்றையாய் மாறிற்று

Thursday, 5 March 2026

ஆற்றின் நிலவு

ஆற்றின் குறுக்கே ஒளிமிகு படகொன்று
இருண்மையின் தேவதையாய் எழுந்த செந்நிலவு
புதர்மண்டிய கரைதனில்
ஓநாய்களின் உண்டாட்டு
செழுமையான மானின் நறுங்கொழுப்பினைக் கவ்வி இழுத்துவந்து
பெண் ஓநாய்முன் போட்டு
குருதி தோய்ந்த பற்கள் நகைத்திட 
காதலை மொழிந்தது ஆண் ஓநாய் 
பெண் ஓநாய் நாணிக் கொழுந்துண்டை மென்றது
செந்நிலவு தேவதை ஆசியைப் பொழிந்து
ஆகாயப்பொதியினுள் மறைந்திட 
ஓடத்தினின்று அவன் கை செவ்வல்லிதனை 
எட்டிப்பறித்திற்று
அருகே மேகலை சுற்றிய யிடைதனை யிழுத்து
தொய்யிலிட்ட மேனிக்கு சூடினன்
ஓநாய்கள் உன்மத்தமாய் பாடின
பேரியாழின் முழக்கமென... 

Wednesday, 25 February 2026

இரவுக்களிப்பு

திரைச்சீலைகளின் குவிப்புக்கு
ஒருபுறம் அவளும்
மறுபுறம் அவனும்
சந்தித்துக் கொள்ளா விழிகள் 
வால்ட்ஸ் நடன இசை துவங்கியது
மெய்மறந்து தியானிப்பதைப் போல் 
சுற்றியாடும் இணையர்கள் 
புதுப்புனல் அள்ளிவரும் பூங்கற்றையாய்
மடந்தையரது நீள்துகில்கள்
எங்கும் பிணையாது துள்ளிட
முதன்முறை அவர்கள் பற்றிக்கொள்ள
முகத்திரைகளுக்கு இடையே 
செவ்விழிகளும் கருவிழிகளும் 
மின்கீற்றாய் முத்தமிட 
உணர்ந்திடும் முன்பே 
கைகள் மாறிட 
அசைவுகள் சுற்றிட 
மீண்டும் அதே இறுகப்பற்றும் விரல்கள் 
இம்முறை அவளதரம் 
இன்னும் இறுக்கமாய் 
அசைவுகள் பிழைத்திட 
முகத்திரையை இழுத்தனன் 
வெடுக்கென திரளுள் மறைந்தனள் 
தேடிற்ற விழிகளுக்கு பரிசாய்க் கிடைத்தது
பியோனிமலர் வாசனை கொண்ட முகத்திரை! 

Saturday, 21 February 2026

பளிங்கு அரங்கு

மாலையின் பொன்னொளியில் 
பளிங்கு அரங்கின் ஓரத்தில் 
கண்ணாடி மதிலுக்கு வெளியே
கரை தழுவிக் கடக்கும் கடலலைகள் 
மேசையில் இரு பீங்கான் கோப்பைகள்
மெல்ல எழுகிற வாசனை 
அகத்தின் துளி மோகம் போல்
அவன் விரல் நுனி ஸ்பரிசம் போல்
காஃபி கோப்பையின் கதகதப்பு
மழுங்கும் ஒளிக்கிடையே
பைசாந்திய முணுமுணுப்புகள் 
அசையாத விழிகளின் 
அறிந்திற்ற மொழியுணர்ந்து
நாண்களை மீட்டும் பாணன்
மிடற்றில் எழுந்த கசப்பாய்
வனதேவதையின் முத்தம் 
மதுரப்பரல்கள் சேர்த்திட
மறைந்தனள் தேவதை 
கையெழுத்தாய் 
கழுத்தில் அவளது நகக்குறி 
அவள் வருகையின் தடமென 
அரங்கெங்கும் கிடந்தன லைலக் மலர்கள்... 

Wednesday, 22 October 2025

மழை மோகம்

இரவின் சாளரம் 

மெல்லிய மழைத்துளிகள்

இருளின் களிப்பாய் பொழிகின்றன

நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்

கொட்டும் துளிகளைத் தொட்டன 

கந்தர்வ ஸ்பரிசமாய் 

கைகளைத் தழுவிய துளிகள் 

நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை

அவள் வாயிற்கதவத்தைத் தட்டின

முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக் 

கடக்கும் பொழுதினில் 

ஏற்பட்ட அணுக்கம் போன்றது

அவளுக்கும் அவனுக்குமான பற்று

தாமதிக்காமல் தாழ் திறந்தனள்

வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்

மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு 

கழுத்தில் இறங்கியது

முழுவதுமாய் நனைந்து நிற்க

அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்

மீண்டும் பெரும் கார்முகிலொன்று

இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது 

முதற்கதிர் எழும்வரை... 



Tuesday, 19 August 2025

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி

அவனுக்கும் அவளுக்குமிடையே

சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்

தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் 

அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்

இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள் 

சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள் 

அவளிதழின் துளிப் புன்முறுவல்

அவன் விரலைத் தீண்டிட 

நொடிநேரக் கடவுள் ஆகினன் 

மறுநொடியில் உபாசகன் 

மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள் 

வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்


Monday, 18 November 2024

மகன்றில் களவு 20

ஏதோவொரு கிரேக்க தெய்வத்தின் சாயல் அவன் 

சில தருணங்களில் டாஃப்னியைப் பின்தொடரும் அப்பலோ

பல இரவுகளிலும் சில பகல்களிலும் டையனஸிஸ்

தற்போது தொலைவில் எங்கோ

துணையாய் அவன் போர்வையின் வெப்பம் 

இன்னும் சில நினைவுச் சிதறல்கள் 

வானின் மேகங்களென 

மெதுவாய்ப் படர்ந்து கரைந்திட 

விழிநிறை நெடுவானின் 

நீலமுமாய் அவன் 

மீண்டும் தெய்வத்தின் கூர்மூக்குத் தீண்டல் வரையில் 

போதுமிந்த கொள்ளா நீலம்


- வெண்பா கீதாயன் 

Sunday, 15 September 2024

மகன்றில் களவு 19

ட்ரெவி நீரூற்றில் அவள் வீசிய இரண்டு நாணயங்கள்

அவளது இச்சைகளை நிறைவேற்றின

அழகியதொரு கூடலும் அளவானதொரு பற்றும்

எஞ்சிய மூன்றாவது நாணயத்தை 

அவனது சட்டைப்பையில் விட்டுச் சென்றனள்

மறுமுறை ஒரு பொழுதினில் அவனுடனான சந்திப்பு

மீண்டுமொரு கூடல்

தேவதையின் கொடையென 

மறுநாள் துயில் கலைந்தவளுக்கு

ஒரு கோப்பைத் தேநீருடன்

அவன் உள்ளங்கை வெப்பம் 

அவளது பகற்கனவுகளில் 

சன்னதமாடும் தெய்வங்களில் ஒன்றாக

வெகுண்டது மூன்றாவது நாணயம் 

ரோம் நகரின் ஏதோவொரு எல்லையில்

தனித்த மணத்துடன் எழுந்த ஒரு காட்டுப்பூ

காவலுக்கு ஓர் அணங்கு

வீனஸ் தன்னிலை தவறி விழியிமைத்தனள்

நானோ நொடிதனில் 


- வெண்பா கீதாயன் 

Thursday, 29 August 2024

மகன்றில் களவு 18

மெல்லிய க்லெஸ்மர் இசை

இரவு விருந்தில் டார்க் சாக்லேட் 

இடையே சில மிடறாய் மது

பொருளற்ற உரையாடல்கள் 

பொருளெனச் சிறு சிணுங்கல்

அவள் தோளில் சிதறும் கற்றைமுடி

அருவியாய் இடைநெளிந்தூற

இடைமறித்திடும் அவன் நோக்கு

இருளும் கொஞ்சம் நாணிடும்

தீக்கீற்றல்களாய் மீட்டல்கள் 

அவன் பின்கழுத்தின் கூச்சத்தை

தீண்டிடும் நகங்கள் 

சாத்தானின் வாசனையாய் படர்ந்திடும் மென்மோகம்

கடவுளின் வழியாய் அவள் அஞ்சன விழிகள் 

இரண்டும் அவனுக்கு 

இரவின் உண்டாட்டென


- வெண்பா கீதாயன் 

Thursday, 27 June 2024

மகன்றில் களவு 17

மெல்லத் தழுவிடும் சாளரத் தென்றல்

இறுக்கி அணைத்துக் கொள்ளும் தனிமை

விரவிக் கிடக்கும் புத்தகங்கள்

விரல் ஒதுக்கும் ஓரக்குழல்

நிறைந்த அமைதி

மோகித்த கனவுகள்

புரண்டு படுக்கும் உடல்

சாளரத்தின் வெளியே ஒயிலாய் ஆடும் கிளை

இலைகள் காதலில் திளைத்து

இன்னும் சிவக்கின்றன

பச்சைக்குள் நெளியும் நரம்புகள்

மிச்சமாய் ஒரு பரிசு

அவன் அணைக்காமல் விட்டுச்சென்ற

சிகரெட் புகை

அறையையும் கடந்தது


- வெண்பா கீதாயன் 

Friday, 31 May 2024

மகன்றில் களவு 16

எங்கோ தொலைவில் இசைக்கும் கசல் 

மீள மீள 

ஈரடி சந்தங்கள் 

அன்பைச் சொல்ல இத்தனை சொற்கள் 

எத்தனை நிலவுகளைக் கண்டிருக்கும் இப்பிரியம் 

நிலவற்ற நாளிலும் கூட பிணைந்திருக்கும் 

ஆறு பருவங்களை சந்தித்திருக்கும்

எதிரெதிரே சந்தித்த விழிகள் சொல்லாத களவினை 

சொற்களால் அணிசெய்தல் அரிது 

எவ்வளவு கரவுகளை உள்ளம் கொள்ளும் 

இரவுகளின் முணுமுணுப்பு போல 

பாலை மொழியின் இசை தரும் தண்மை

என்றோ சந்தித்த விழிகளின் களவு 

அவளது யாழ் மீட்டியது 

ஈரடி சந்தங்கள் 

மீள மீள


- வெண்பா கீதாயன் 

Friday, 3 May 2024

மகன்றில் களவு 15

பிரிந்து கூடிடும் முகில்களின் ஒருநாள்

முகில்களற்ற தெளிந்த வானின் ஒருநாள்

பகலில் தெரியும் நிலவின் நாளும் கூட

பொழுதுகள் புலப்படா நாளும் அதுதான்

கருமுகில் உதிர்க்கும் முதற்துளியின் நாளது

அந்நாள்தனில் மொழிந்த சொற்கள்தாம்

கோடைகாலத்துப் பெருமழை

போதும் சொற்கள்

கோர்த்து அணிகலனாய் சுமந்திட

எடை தாளாது

முன்னொருநாள்

அரிவையின் கூந்தல் விலக்கி

சுவாசத்தின் சத்தம் கேட்டிடும் நெருக்கத்தில்

இதயத்தின் முணுமுணுப்பின் அணுக்கத்தில்

அவன் சொல்லிச் சென்ற வரிகள் சில

அவள் மேனியை அணிசெய்திடும் துகில்களென

நாணத்தைக் கவர்ந்து ஒளிந்தவனுக்கு

அவ்வரிகளை நினைவுபடுத்துமோ? 

இந்நாட்கள்


- வெண்பா கீதாயன் 

Wednesday, 3 April 2024

மகன்றில் களவு 14

பாலைச் சுரமென இரவு

பற்றிட நன்றாய் திண்தோள்

போதிய அளவாய் அணுக்கம்

நுதல் தொட்டு மிடறிறங்கும் வியர்வை

பவழமல்லி ஸ்பரிசமாய் உறுத்தும் மீசை

அறைமுனையில் மிளிரும் இருவிழிகள்

மெதுவாய் இருளில் நகர்ந்தது

ஊடலுக்கு ஆயத்தமாகும் பூனைக்குட்டி

மேசைமேல் குதித்தது 

புகைப்படச் சட்டகத்தைத் தட்டிவிட 

கொள்ளை பிரியம்

புகைப்படத்தில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் 

தலைவனும் தலைவியும் 

இன்னும் கட்டிக்கொண்டனர்

பூனை அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல்

அமைதியாய் அறைக்கு வெளியே நடந்தது 


- வெண்பா கீதாயன் 

Saturday, 9 March 2024

மகன்றில் களவு 13

சாளரம் நிறைத்த தீக்கொன்றைப் பூக்கள்

கூடுதல் செம்மை

துளி நாணமுமாய்

தெளிந்த வானில் 

முகிலென ஓர் ஸ்பரிசம் 

மெதுவாய் நகர்ந்திட

நிழலெனப் படர்ந்த அணுக்கம்

உதிர்ந்த ஒற்றைத் தீக்கொன்றை

தொலைவில் நனிவெயில்

நிலத்தில் வீழ்ந்த மலருக்கு 

கிட்டியது 

ஒற்றை முகிலும்

பற்றிட நிழலும்

இன்னும் அடர்சிவப்பாய்

இன்மதுவுடன் 

புதுமலராய்


- வெண்பா கீதாயன் 

Saturday, 10 February 2024

மகன்றில் களவு 12

கானல் நீர் வழிந்திடும் வேனில்

இரவுக்கு ஏங்கும் நிலம்

பொல்லா தாகத்தைப் போக்கிடும்

ஓர் துளி ஆறென அவள்

பாலை உணராத பசுமை

எரிமீனொன்று விழுந்தது போல் 

சடுதியில் அச்சான முத்தம் 

போர்த்திய இரவினுள் எண்ணிலடங்கா விண்மீன்கள் 

தனியே வெறித்த நிலவின் மீது 

சிட்டிகைக் காதலைத் தூவிவிட்டு 

அனிச்சையாய் மறைந்தாள்

வேனிலும் கலைந்தது


- வெண்பா கீதாயன் 

Saturday, 27 January 2024

மகன்றில் களவு 11

அவனிடம் சேராத கடிதங்கள்

அலமாரிக்குள் ஒளிந்து கிடந்தன

அவள் Scarlet வண்ண நகப்பூச்சுக்கு ஏக்கம்

 காற்றில் பரவிய இருவாச்சி வாசம்

பின்னிக் கொண்ட விரல்கள் 

பசையிட்ட இறுக்கம் 

பின்கழுத்தில் உரசும் மீசை

பாதங்களில் என்றுமில்லாத கூச்சம்

தள்ளிவிட்டவளிடம் மெய் சொல்லவா என்றான் 

அருகே இழுத்து அவள் சொல்லிய

மந்தணத்தை இரு நிழல்களும் அறியும் 

கடிதங்கள் மெதுவாகத் தம்மை 

வாசித்து நாணுற்றன

அலமாரி இன்னும் இறுக்கமாய் பூட்டிக்கொண்டது

மாடத்தில் படர்ந்த நிழல் கண்டு

இருவாச்சிப் பூக்கள் பசந்தன


- வெண்பா கீதாயன் 

ஆசிரியர் தினம்

பெற்றோருக்கு அடுத்து குழந்தைகள் தங்கள் வாழ்வில் சந்திக்கின்ற பெரியவர்கள் ஆசிரியர்கள். எனக்கு பள்ளி துவங்கி கல்லூரி வரை நல்ல ஆசிரியர்கள் கிடை...