Saturday, 7 June 2025
Thug life vs Adam's life
Friday, 10 January 2025
பாவை மொழிகள் (4 - 6)
அரவம் துயிலும் பொருட்டு
மெதுவாய் அகழ்வில் ஊர
ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!
மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட
சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட
அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?
கிள்ளிடும் பொன்பாவாய்!
//
அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்
மடித்து வைத்த இழைப்பட்டு
கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்
கழற்றி எறிவானெனும் மதியின்றி
களவைத் தூண்டும் மடப்பட்டு
முந்தைய கூடலை நினைவுருத்தி
வருத்திடும் அணியிழையாய்!
//
புலரொளியில் நிலம்படர் ஈரம்
அவன் உள்ளங்கை மணம்
அந்த நாகலிங்கப் பூக்கள்
கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி
ஒற்றை பூவின் மணத்தை
மந்தணமாய் மெல்ல
கள்ளமாய் நகைத்திடும் மார்கழி
உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்
//
Wednesday, 18 December 2024
பாவை மொழிகள் - 3
வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
Tuesday, 17 December 2024
பாவை மொழிகள் - 2
அஞ்சனமிடாத விழிகள்
துயில் துறந்து விரிந்திட
சாளரம் விளிக்கின்ற வாசனை
சிலம்புடைந்த பரலென
சிதறும் தென்னமொக்குகாள்!
உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்
நின் விழிநிறை அறியாது மடவாய்!
பாவை மொழிகள் - 1
கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று
தேகம் அணைத்திடும் குளிர்
பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு
புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்
கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள்
முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்
விழிதிறவாய் எம்பாவாய்!
Monday, 18 November 2024
மகன்றில் களவு 20
ஏதோவொரு கிரேக்க தெய்வத்தின் சாயல் அவன்
சில தருணங்களில் டாஃப்னியைப் பின்தொடரும் அப்பலோ
பல இரவுகளிலும் சில பகல்களிலும் டையனஸிஸ்
தற்போது தொலைவில் எங்கோ
துணையாய் அவன் போர்வையின் வெப்பம்
இன்னும் சில நினைவுச் சிதறல்கள்
வானின் மேகங்களென
மெதுவாய்ப் படர்ந்து கரைந்திட
விழிநிறை நெடுவானின்
நீலமுமாய் அவன்
மீண்டும் தெய்வத்தின் கூர்மூக்குத் தீண்டல் வரையில்
போதுமிந்த கொள்ளா நீலம்
- வெண்பா கீதாயன்
Sunday, 15 September 2024
மகன்றில் களவு 19
ட்ரெவி நீரூற்றில் அவள் வீசிய இரண்டு நாணயங்கள்
அவளது இச்சைகளை நிறைவேற்றின
அழகியதொரு கூடலும் அளவானதொரு பற்றும்
எஞ்சிய மூன்றாவது நாணயத்தை
அவனது சட்டைப்பையில் விட்டுச் சென்றனள்
மறுமுறை ஒரு பொழுதினில் அவனுடனான சந்திப்பு
மீண்டுமொரு கூடல்
தேவதையின் கொடையென
மறுநாள் துயில் கலைந்தவளுக்கு
ஒரு கோப்பைத் தேநீருடன்
அவன் உள்ளங்கை வெப்பம்
அவளது பகற்கனவுகளில்
சன்னதமாடும் தெய்வங்களில் ஒன்றாக
வெகுண்டது மூன்றாவது நாணயம்
ரோம் நகரின் ஏதோவொரு எல்லையில்
தனித்த மணத்துடன் எழுந்த ஒரு காட்டுப்பூ
காவலுக்கு ஓர் அணங்கு
வீனஸ் தன்னிலை தவறி விழியிமைத்தனள்
நானோ நொடிதனில்
- வெண்பா கீதாயன்
ஆசிரியர் தினம்
பெற்றோருக்கு அடுத்து குழந்தைகள் தங்கள் வாழ்வில் சந்திக்கின்ற பெரியவர்கள் ஆசிரியர்கள். எனக்கு பள்ளி துவங்கி கல்லூரி வரை நல்ல ஆசிரியர்கள் கிடை...
-
திரைச்சீலைகளின் குவிப்புக்கு ஒருபுறம் அவளும் மறுபுறம் அவனும் சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியது மெய்மறந்து தியானிப்பதைப...
-
மாலையின் பொன்னொளியில் பளிங்கு அரங்கின் ஓரத்தில் கண்ணாடி மதிலுக்கு வெளியே கரை தழுவிக் கடக்கும் கடலலைகள் மேசையில் இரு பீங்கான் கோப்பைகள் மெ...
-
நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள் வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ? பசலையுற்ற தேகம் கண்டு முதற்...