Wednesday, 27 December 2023

மகன்றில் களவு 10

இடையோடு இழுத்து வளைத்திட

மீசையில் சிக்கிய அவளிதழ்

சிதறிய நித்திலப் பரல்கள்

எடுக்கவுமில்லை கோர்க்கவுமில்லை

நிரம்பி வழிந்த அமைதியைக் கலைத்தது

இருவரது மூச்சுக்காற்று

புடவை நாணத்தில் சுருங்கிற்று

காலம் கொஞ்சம் சலித்துகொண்டது

வெளிச்சத்திற்கு வெட்கமில்லை

சாளரத்தின் வழியே அழையா விருந்தாளியாய் நுழைந்தது

முழுவதுமாய் அவனுள் லயித்தாள்

அவனைப் பொருட்படுத்தவிலை

கடந்துசெல்லும் நிமிடங்களை கைகொள்ள முடியாதென்று


-வெண்பா கீதாயன் 

Thursday, 16 November 2023

மகன்றில் களவு 9

அவன் வரவுக்கென்றே நிலையில்

மாட்டப்பட்ட மஞ்சள் வண்ணத் திரைச்சீலை

ஒவ்வொரு முறை அசையும் பொழுதிலும்

அவனது பிம்பம்

போனமுறை அணிந்த வெளிர்நீல வெள்ளைக்கோடு சட்டையுடன்

கடிகார ஊசல் போல

வந்து மறைந்தான்

அவளது கதவு

நல்லூழ் கொண்ட ஓர் அந்திவேளையில் தட்டப்பட்டது

அன்றைக்கு அவன் அணிந்திருந்தது வேறு 

அவளோ அன்றும் முதல் சந்திப்பில் அணிந்த 

அதே ப்ளூபெர்ரி நிற சேலையுடன் இருந்தாள் 

அறைமுழுதும் நிறைந்தது

இருவரின் இனிமை

மஞ்சள் திரைச்சீலை பேறு பெற்றது


-வெண்பா கீதாயன் 

Saturday, 4 November 2023

மகன்றில் களவு 8

அரக்கு நிற டாமி ஹில்ஃபிகர் சட்டையினுள் முகம் புதைத்திட

கூந்தல் கற்றையைப் பற்றிய விரல்கள்

பின்கழுத்தில் முன்பு அழுத்திய இதழின் லிப்ஸ்டிக் தடம்

அன்பின் அழுத்தமெனப் பதிந்தது

பதிலுக்கு அன்பைப் பகிர்ந்திட

அவளது இடத்தோளில் உகிர்த்தடம்

யாருமில்லை தானே கள்வனென

சுவரோர நிலைக்கண்ணாடி

இன்னும் எத்தனை காலம் இப்படி இறுக்கி 

தவம் செய்வாயென முத்தமிட்டுத் தட்டிவிட்டாள்

திரும்பி நோக்காது நடந்தாள் 

இன்னும் அவன் இதயத்துடிப்பு கேட்கின்றது

- வெண்பா கீதாயன் 

Wednesday, 25 October 2023

மகன்றில் களவு 7

கடிகையின் முள் நகர்வுகளை நோக்கி
தவம் செய்தது தாபம்
நாளும் அல்லும் அவள் இருத்தலை அறியாது
பொறுமையாய் நகர்ந்தன
சிதறிக்கிடந்த மென்முல்லைகள் 
அணிகளற்ற கூந்தல்
கலையாத தொய்யில்
துயில் மறந்த விழிகள்
வரவின் பொருட்டு வாயிலை நோக்கின
அவன் தலையணை சேமித்த வாசனை
தற்போதைக்கு ஆற்றும் குளிகை
இடை நில்லா கலிங்கத்தை
இழுத்து வளைத்திட
அறுபொழுதும் ஓய்ந்து கிடக்கின்றன
அறிவையை அறியாது இருக்கும் அவன் வன்நெஞ்சு காத்திருக்கும் கடிகைக்கேனும்
மோட்சம் அளிக்கட்டும் 

Monday, 23 October 2023

மகன்றில் களவு 6

இந்த யாமத்தில் அவிழும் முகிழின்
ஒரு துளி மதுவினும் பேரினிமை
அவன் மிச்சம் வைத்த தேறல்
குறையற்ற யாழின் நரம்புகள்
அணிச்சரமென கோர்த்திட
ஒளிர்நிலவின் தண்மை
மெதுவாய் கரைந்திட
உரசிய தோள்கள் அறியும்
உண்மை நிலைதனை
அனைத்தும் மாயை
தன்னினிமையே மெய்யென
நகைத்தது தேறலின் கடைத்துளி 
யாமமோ கடந்திட மறந்து துயின்றது
அவன்மேல் சரிந்தவள் மெதுவாய் மொழிந்தாள்
துயிலும் இரவுதனை எழுப்பி விடாதேயென்று

- வெண்பா கீதாயன் 

Saturday, 7 October 2023

மகன்றில் களவு 5

துள்ளி வரும் அலைகளின் நீலம்

ஒட்டிக் கொண்டது பாதங்களில்

கூடலில் இருந்த நண்டுகளிடையே முணுமுணுப்பு 

கோர்த்துக்கொண்ட கரங்களுள் இருந்த வெப்பத்தில்

வான்வெளியில் இருந்து உருகிப் பொழிந்த உடுக்கள்

இறுக்கத்தில் தளர்ந்த முகில்கள் 

நாணமேதுமற்று ஒளிரும் வெண்கீற்று

ஸ்பரிசத்துடன் கலந்த மணல்

இருள்தான் இன்னுமொரு பொழுது நீடிக்கட்டும்

இத்தனை மிளிர்வுகளுக்கு இன்னொரு தருணம் அரிது

- வெண்பா கீதாயன் 

Tuesday, 26 September 2023

மகன்றில் களவு 4

பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை

நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்

நொடியில் பிடுங்கி மேசையில்

வீசினான்

சிதறிய மலர்களின் மணம்

நாணமுற்றன

அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை

அவன் மூச்சுக்காற்று சுவைத்த

நொடிதனில்

- வெண்பா கீதாயன் 

Thursday, 21 September 2023

மகன்றில் களவு 3

சேடல் முகிழ் பொழுதது

மோதி விளையாடும் முகில்கள்

சிதறிய நூபுர முத்துப்பரல்கள் 

அடர்வன ஓர் வகிடுப் பாதையில் 

தேடிட நேரமன்று

என்றோ அவ்வழியே அவன் வரவு

தாள்தனில் உறுத்திய பரல்கள் 

கணப்பொழுதில் அவள் உரு

எழுந்து அணைந்தது 

வெறி கொண்ட அணங்கென 


- வெண்பா கீதாயன் 

Tuesday, 12 September 2023

மகன்றில் களவு - 2

அதிகாலையா பின்னிரவா என்றறியாத வேளையில்

ஒளிரும் விண்மீன்களுக்கிடையே

ஏதோவொரு விண்மீன்

என் சாளரத்தில் அமர்ந்தது

அதனிடம் பெயர் கேட்க புரண்டு படுத்தேன்

அத்தனை மிளிர்வுடன்

நின்றொளிர்ந்தது

விழிகள் கூசிட

அவன் பெயர் இட்டேன்

இன்னும் நெருக்கத்தில் வந்தமர்ந்தது விண்மீன்

சாளரத் திரையை இழுத்துவிட்டு

கண்களை மூடிக் கொண்டேன்


-வெண்பா கீதாயன் 

Monday, 11 September 2023

மகன்றில் களவு 1

பெரும்பொழுதுகள் பல கடந்து
யாமத்துத் துயில்களைத் துறந்து
ஆதியுகத்தினில்
காதலுற்ற அரிவையும் அவளவனும்
திகட்டும் முயக்கத்தில்
நிலத்தின் ஆழத்தில் 
அமிழ்த்திய மதுக்குடுவை
அவனுக்குக் கிடைக்கப்பெற்றது 
இக்கார்காலத்தில் 
அம்மதுவின் துளி ருசி
அவளது காதல் 

- வெண்பா கீதாயன் 

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...