வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
அஞ்சனமிடாத விழிகள்
துயில் துறந்து விரிந்திட
சாளரம் விளிக்கின்ற வாசனை
சிலம்புடைந்த பரலென
சிதறும் தென்னமொக்குகாள்!
உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்
நின் விழிநிறை அறியாது மடவாய்!
கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று
தேகம் அணைத்திடும் குளிர்
பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு
புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்
கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள்
முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்
விழிதிறவாய் எம்பாவாய்!
ஏதோவொரு கிரேக்க தெய்வத்தின் சாயல் அவன்
சில தருணங்களில் டாஃப்னியைப் பின்தொடரும் அப்பலோ
பல இரவுகளிலும் சில பகல்களிலும் டையனஸிஸ்
தற்போது தொலைவில் எங்கோ
துணையாய் அவன் போர்வையின் வெப்பம்
இன்னும் சில நினைவுச் சிதறல்கள்
வானின் மேகங்களென
மெதுவாய்ப் படர்ந்து கரைந்திட
விழிநிறை நெடுவானின்
நீலமுமாய் அவன்
மீண்டும் தெய்வத்தின் கூர்மூக்குத் தீண்டல் வரையில்
போதுமிந்த கொள்ளா நீலம்
- வெண்பா கீதாயன்
ட்ரெவி நீரூற்றில் அவள் வீசிய இரண்டு நாணயங்கள்
அவளது இச்சைகளை நிறைவேற்றின
அழகியதொரு கூடலும் அளவானதொரு பற்றும்
எஞ்சிய மூன்றாவது நாணயத்தை
அவனது சட்டைப்பையில் விட்டுச் சென்றனள்
மறுமுறை ஒரு பொழுதினில் அவனுடனான சந்திப்பு
மீண்டுமொரு கூடல்
தேவதையின் கொடையென
மறுநாள் துயில் கலைந்தவளுக்கு
ஒரு கோப்பைத் தேநீருடன்
அவன் உள்ளங்கை வெப்பம்
அவளது பகற்கனவுகளில்
சன்னதமாடும் தெய்வங்களில் ஒன்றாக
வெகுண்டது மூன்றாவது நாணயம்
ரோம் நகரின் ஏதோவொரு எல்லையில்
தனித்த மணத்துடன் எழுந்த ஒரு காட்டுப்பூ
காவலுக்கு ஓர் அணங்கு
வீனஸ் தன்னிலை தவறி விழியிமைத்தனள்
நானோ நொடிதனில்
- வெண்பா கீதாயன்
மெல்லிய க்லெஸ்மர் இசை
இரவு விருந்தில் டார்க் சாக்லேட்
இடையே சில மிடறாய் மது
பொருளற்ற உரையாடல்கள்
பொருளெனச் சிறு சிணுங்கல்
அவள் தோளில் சிதறும் கற்றைமுடி
அருவியாய் இடைநெளிந்தூற
இடைமறித்திடும் அவன் நோக்கு
இருளும் கொஞ்சம் நாணிடும்
தீக்கீற்றல்களாய் மீட்டல்கள்
அவன் பின்கழுத்தின் கூச்சத்தை
தீண்டிடும் நகங்கள்
சாத்தானின் வாசனையாய் படர்ந்திடும் மென்மோகம்
கடவுளின் வழியாய் அவள் அஞ்சன விழிகள்
இரண்டும் அவனுக்கு
இரவின் உண்டாட்டென
- வெண்பா கீதாயன்
மெல்லத் தழுவிடும் சாளரத் தென்றல்
இறுக்கி அணைத்துக் கொள்ளும் தனிமை
விரவிக் கிடக்கும் புத்தகங்கள்
விரல் ஒதுக்கும் ஓரக்குழல்
நிறைந்த அமைதி
மோகித்த கனவுகள்
புரண்டு படுக்கும் உடல்
சாளரத்தின் வெளியே ஒயிலாய் ஆடும் கிளை
இலைகள் காதலில் திளைத்து
இன்னும் சிவக்கின்றன
பச்சைக்குள் நெளியும் நரம்புகள்
மிச்சமாய் ஒரு பரிசு
அவன் அணைக்காமல் விட்டுச்சென்ற
சிகரெட் புகை
அறையையும் கடந்தது
- வெண்பா கீதாயன்
எங்கோ தொலைவில் இசைக்கும் கசல்
மீள மீள
ஈரடி சந்தங்கள்
அன்பைச் சொல்ல இத்தனை சொற்கள்
எத்தனை நிலவுகளைக் கண்டிருக்கும் இப்பிரியம்
நிலவற்ற நாளிலும் கூட பிணைந்திருக்கும்
ஆறு பருவங்களை சந்தித்திருக்கும்
எதிரெதிரே சந்தித்த விழிகள் சொல்லாத களவினை
சொற்களால் அணிசெய்தல் அரிது
எவ்வளவு கரவுகளை உள்ளம் கொள்ளும்
இரவுகளின் முணுமுணுப்பு போல
பாலை மொழியின் இசை தரும் தண்மை
என்றோ சந்தித்த விழிகளின் களவு
அவளது யாழ் மீட்டியது
ஈரடி சந்தங்கள்
மீள மீள
- வெண்பா கீதாயன்
பிரிந்து கூடிடும் முகில்களின் ஒருநாள்
முகில்களற்ற தெளிந்த வானின் ஒருநாள்
பகலில் தெரியும் நிலவின் நாளும் கூட
பொழுதுகள் புலப்படா நாளும் அதுதான்
கருமுகில் உதிர்க்கும் முதற்துளியின் நாளது
அந்நாள்தனில் மொழிந்த சொற்கள்தாம்
கோடைகாலத்துப் பெருமழை
போதும் சொற்கள்
கோர்த்து அணிகலனாய் சுமந்திட
எடை தாளாது
முன்னொருநாள்
அரிவையின் கூந்தல் விலக்கி
சுவாசத்தின் சத்தம் கேட்டிடும் நெருக்கத்தில்
இதயத்தின் முணுமுணுப்பின் அணுக்கத்தில்
அவன் சொல்லிச் சென்ற வரிகள் சில
அவள் மேனியை அணிசெய்திடும் துகில்களென
நாணத்தைக் கவர்ந்து ஒளிந்தவனுக்கு
அவ்வரிகளை நினைவுபடுத்துமோ?
இந்நாட்கள்
- வெண்பா கீதாயன்
பாலைச் சுரமென இரவு
பற்றிட நன்றாய் திண்தோள்
போதிய அளவாய் அணுக்கம்
நுதல் தொட்டு மிடறிறங்கும் வியர்வை
பவழமல்லி ஸ்பரிசமாய் உறுத்தும் மீசை
அறைமுனையில் மிளிரும் இருவிழிகள்
மெதுவாய் இருளில் நகர்ந்தது
ஊடலுக்கு ஆயத்தமாகும் பூனைக்குட்டி
மேசைமேல் குதித்தது
புகைப்படச் சட்டகத்தைத் தட்டிவிட
கொள்ளை பிரியம்
புகைப்படத்தில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
தலைவனும் தலைவியும்
இன்னும் கட்டிக்கொண்டனர்
பூனை அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல்
அமைதியாய் அறைக்கு வெளியே நடந்தது
- வெண்பா கீதாயன்
சாளரம் நிறைத்த தீக்கொன்றைப் பூக்கள்
கூடுதல் செம்மை
துளி நாணமுமாய்
தெளிந்த வானில்
முகிலென ஓர் ஸ்பரிசம்
மெதுவாய் நகர்ந்திட
நிழலெனப் படர்ந்த அணுக்கம்
உதிர்ந்த ஒற்றைத் தீக்கொன்றை
தொலைவில் நனிவெயில்
நிலத்தில் வீழ்ந்த மலருக்கு
கிட்டியது
ஒற்றை முகிலும்
பற்றிட நிழலும்
இன்னும் அடர்சிவப்பாய்
இன்மதுவுடன்
புதுமலராய்
- வெண்பா கீதாயன்
கானல் நீர் வழிந்திடும் வேனில்
இரவுக்கு ஏங்கும் நிலம்
பொல்லா தாகத்தைப் போக்கிடும்
ஓர் துளி ஆறென அவள்
பாலை உணராத பசுமை
எரிமீனொன்று விழுந்தது போல்
சடுதியில் அச்சான முத்தம்
போர்த்திய இரவினுள் எண்ணிலடங்கா விண்மீன்கள்
தனியே வெறித்த நிலவின் மீது
சிட்டிகைக் காதலைத் தூவிவிட்டு
அனிச்சையாய் மறைந்தாள்
வேனிலும் கலைந்தது
- வெண்பா கீதாயன்
அவனிடம் சேராத கடிதங்கள்
அலமாரிக்குள் ஒளிந்து கிடந்தன
அவள் Scarlet வண்ண நகப்பூச்சுக்கு ஏக்கம்
காற்றில் பரவிய இருவாச்சி வாசம்
பின்னிக் கொண்ட விரல்கள்
பசையிட்ட இறுக்கம்
பின்கழுத்தில் உரசும் மீசை
பாதங்களில் என்றுமில்லாத கூச்சம்
தள்ளிவிட்டவளிடம் மெய் சொல்லவா என்றான்
அருகே இழுத்து அவள் சொல்லிய
மந்தணத்தை இரு நிழல்களும் அறியும்
கடிதங்கள் மெதுவாகத் தம்மை
வாசித்து நாணுற்றன
அலமாரி இன்னும் இறுக்கமாய் பூட்டிக்கொண்டது
மாடத்தில் படர்ந்த நிழல் கண்டு
இருவாச்சிப் பூக்கள் பசந்தன
- வெண்பா கீதாயன்
ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் அவளைச் சூழ்ந்...